கோட்டாபயவிற்கு 100 நாள் அவகாசம்; தவறினால்… : சிவாஜி கடும் எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 18, 2019

கோட்டாபயவிற்கு 100 நாள் அவகாசம்; தவறினால்… : சிவாஜி கடும் எச்சரிக்கை!

புதிய ஜனாதிபதி கோட்டாபயவிற்கு 100 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர் இனப்பிரச்சனை தீர்விற்கு உறுதியான நடவடிக்கையெடுக்கா விட்டால், ஐ.நாவின் ஒத்துழைப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை கோரும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளார் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.


இன்று (18) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக நாடுகளில் ஒருவர் புதிதாக பதவிக்கு வருபவருக்கு 100 நாள் அவகாசம் வழங்கப்படுவதுண்டு. அதற்குள் அவருக்கு எதிராக கடுமையான போராட்டங்களோ, விமர்சனங்களோ வைப்பதில்லை. அந்தவகையில் கோட்டாபயவிற்கு 100 நாள் அவகாசம் வழங்குகிறோம்.

இதற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வுககாண உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால், ஐ.நாவின் ஒத்துழைப்புடன் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் சர்வசன வாக்கெடுப்பை நடத்தும்படி இலங்கைக்குள் இருந்தும், வெளியிலிருந்தும் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம். அதற்கு எந்த தடை வந்தாலும் எதிர்கொள்வோம்.

நீங்களாக இந்த முயற்சியை மேற்கொண்டால் நாம் ஒத்துழைப்போம்.
வருடக்கணக்கில் வழங்க முடியாது. தீபாவளிக்கு வரும், பொங்கலிற்கு வருமென கூறிக்கொண்டிருக்க முடியாது.

கோட்டாபய காலி முகத்திடலிலோ, சுதந்திர சதுக்கதிலோ பதவிப்பிரமாணம் செய்திருக்கலாம். ஆனால் ரவன்வெலிசாயவிலிருந்து பதவியேற்ற கோட்டா, நவீன துட்டகைமுனுவாக இருக்கப் போகிறாரா, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை போல முழு இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கப் போகிறாரா என்று தெரியவில்லை.

ஜனாதிபதியாக நான் போட்டியிடவில்லை. எதிர்பார்த்ததை போல நிறைய வாக்கு கிடைத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் 12,000 வாக்குகள் கிடைத்தன. நான் கோட்டாபயவிடம் பணம் வாங்கியதாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தையும் மீறி உணர்வாக அவர்கள் வாக்களித்திருந்தனர். அவர்களிற்கு நன்றி.

வடக்கு கிழக்கிற்கு வெளியிலும், மலையகம், புத்தளம், கேகாலை மாவட்டத்திலிருந்தும் வாக்களித்தனர். வானொலி, தொலைக்காட்சியில் எனது உரைகளை பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு பலர் வாக்களித்தனர். அங்கிருந்து 943 பேர் வாக்களித்தனர். அது எனக்கு பெரிய திருப்தி.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டதன் எதிரொலிதான் ஹம்பாந்தோட்டையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரை சீனாவிற்கு வழங்கப்பட்டது. போரில் புலிகள் தோற்கடிக்கப்படட்டும் என நீங்கள் மௌனமாக இருந்ததால்தான், இன்று உங்களின் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் இலங்கை விவகாத்தில் தலையிட்டு, இனப்பிரச்சனையை தீர்க்க முடியும். அதைவிடுத்து, ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம் போன்ற அரசியலமைப்புக்களால் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது. இடைக்கால தீர்வாக, பொலிஸ், காணி அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்.

அரசியமைப்பை முழுமையாக பாதுகாப்பதாக இன்று கோட்டாபய பதவிப்பிரமாணம் செய்கிறார். அரசியலமைப்பில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களையே நாம் கோருகிறோம். எமக்குரிய அதிகாரங்களை நீங்கள் வழங்காவிடில் கோரிப்பெறும் நிலைபேற்படும். இதற்காக சட்டமறுப்பு, மீறலாக நாம் போராடும் நிலைக்கு தள்ளப்படுவோம். இந்த அரசியலமைப்பை பகிரங்கமாகவும் கொளுத்துவோம். வேண்டுமானால் கைது செய்யுங்கள்.

தேர்தலில் எனக்கு வாக்கு குறைந்தமைக்கு இன்னொரு காரணமிருந்தது. வடக்கில் ஈ.பி.டி.பியும், கிழக்கில் கருணா அணியும், முதலாவது வாக்கை கோட்டாவிற்கும், இரண்டாவது வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் போடும்படி கூறியுள்ளார்கள். இது வஞசக்கத்தனமாகது. மக்களும் பாவம். பறவைக்கு வாக்களிக்க சொன்னால், மாறி கழுகிற்கு வாக்களித்து விட்டார்கள்.

2010இல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் டிமுடிவின் மூலம், போர்க்குற்ற விவகாரங்களை மறக்கச்செய்யும் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றது. அதற்கெதிராகத்தான் 2010இல் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினேன். அந்த முடிவை எடுப்பதால், நாடாளுமன்ற தேர்தலிற்கு வர முடியாது என்று தெரிந்தும், அதை சம்பந்தனிடம் சொல்லிவிட்டு, அந்த முடிவை எடுத்தேன். 2015 இலும் இன்னொரு போர்க்குற்றவாளியை ஆதரிக்கும் முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. இவர்களுடன் கனவான் ஒப்பந்தம் செய்ய முடியாது, அமெரிக்க இந்தியா போன்ற நாடுகளின் அனுசரணையில் மைத்திரி உத்தரவாதம் வழங்கினால் ஏற்றுக்கொள்ளலாம் என்றேன். ஆனால் அது நடக்கவில்லை. அப்போது சம்பந்தனிடம் சொன்னேன், மைதிதிரியை ஆதரிக்க முடியாது, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை ஆதரிக்கும் சிறிதுங்க ஜயரியவை ஆதரிக்க போவதாக சம்பந்தனிடம் சொன்னேன். மக்கள் பெருவாரியாக விரும்பியதால் எதிர்ப்பிரச்சாரம் செய்யவில்லையென்றும் சொன்னேன்.

மைத்திரிக்கு முதுகெலும்பில்லையென சம்பந்தனிடம் சொன்னதையும் பொருட்படுத்தாமல் அவரை ஆதரித்தார்கள். கடைசியில் அவருக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று மட்டுமல்ல, மனநோய் இருக்கிறதா, இல்லையா என ஆராயுமளவிற்கு ஆட்சி நடந்தது என்றார்.