கடத்தியவர்களை கொன்று முதலைக்கு இரையாக போட்டோம்: வெள்ளை வான் சாரதி ‘பகீர்’ தகவல்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 11, 2019

கடத்தியவர்களை கொன்று முதலைக்கு இரையாக போட்டோம்: வெள்ளை வான் சாரதி ‘பகீர்’ தகவல்கள்!



கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் ஆட்களை கடத்தி கொன்ற வெள்ளைவான் அணியில், வாகன சாரதியாக பணியாற்றினேன் என ஒருவர் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அத்துடன், வெள்ளைவான் அணி, கடத்தல்கள், கொலை பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார்.

இவ்வாறு 300 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (10) அமைச்சர் ராஜித சேனரத்னவின் எற்பாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அத்துடன், வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட பின்னர் அதிர்ஸ்டவசமாக வீடு திரும்பியவர் என குறிப்பிட்ட ஒருவரும் தனது திகில் அனுபவங்களை பேசினார்.

இங்கு உரையாற்றிய ராஜித, நவம்பர் 17ம் திகதி ஆட்சி மீள உறுதி செய்யப்பட்ட பின்னர் ராஜபக்ச காலத்தில் நடந்த கொலைகள் மற்றும் கடத்தல்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளைத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

யுத்தத்தின் முடிவில் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் 7,000 மெட்ரிக் தொன் தங்கம் என்ன ஆனது என்பது குறித்து இன்னும் எந்தத் தகவல்களும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். இந்த தங்க புதையல் இதுவரை ஒரு மர்மமாகவே இருப்பதாக அறிவித்த அமைச்சர், இந்த விவகாரத்திலும் விசாரணைகள் தொடங்கும் என்று கூறினார்.

ராஜபக்ஷ காலத்தில் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளால் அச்சத்துடன் அறியப்பட்ட வெள்ளை வாகன சாரதியாக பணியாற்றினார் என ஒருவரை அமைச்சர் ராஜித அறிமுகப்படுத்தினார்.  அந்தோணி பெர்னாண்டோ என்ற அந்த நபர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் அத்துல மதநாயக்க என்பவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ராஜபக்ச ஆட்சியின் போது நடந்த கடத்தல்கள் மற்றும் கொலைகள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவுகளின்படி நடத்தப்பட்டதாக பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த அரசியல் குற்றங்களில் இராணுவத்தின் ஒரு பிரிகேடியர் மற்றும் ஒரு மேஜர் தொடர்புபட்டிருந்தனர்.

கடத்தப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சித்திரவதைக் கூடங்களிற்கு கொண்டு செல்லப்பட்டு கடுமையான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர் என்று பெர்னாண்டோ கூறினார். மொனராகல பகுதியில் அமைந்துள்ள ஒரு இரகசிய சித்திரவதைக் கூடத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், முதலைகள் நிறைந்த அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் வீசப்படும். தற்போது அந்த நீர்த்தேக்கத்தின் சரியான இடத்தை அவரால் அடையாளம் காண முடியவில்லை என்று பெர்னாண்டோ கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பஸ் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திருடியதற்காக ராகம பகுதியில் 2013 ஒக்டோபரில் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் மதநாயக்கவும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பேசினார்.

தம்மால் கொண்டு வரப்பட்ட 8 பில்லியன் யூரோ, தங்கம் பிரபாகரனிற்கு சொந்தமானது, கோட்டாபயவிற்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டதாக தனக்கு கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த தகவல்களை பொறுப்புடன் வெளிப்படுத்துவதாகவும், தமது தகவல்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதாகவும் இருவரும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் இது இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.