பல்கலைகழக மாணவர்களையும், அனைத்து தமிழ் மக்களையும் ஐந்து கட்சிகளும் ஏமாற்றியுள்ளன. என்ன நிபந்தனையின் அடிப்படையில் வேட்பாளரை தமிழ் அரசுக்கட்சி கூட்டிக்காட்டியது என்பது தெரியவில்லை. 13 அம்ச கோரிக்கைகளை விட வலுவான வாக்குறுதிகளை ஏற்று ஆதரவளித்திருப்பார்கள் என நம்புகிறோம். 13 கோரிக்கை ஆவணத்தில் உள்ளபடி, அடுத்த மூன்று மாதங்களிற்குள் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இல்லையேல் இந்த கட்சிகளின் ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக மக்கள் சரியான முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு மிகமிக காட்டமாக தெரிிவத்துள்ளனர் யாழ் பல்கலைகழக மாணவர்கள். மாணவர்களின் ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்த பின்னர், இன்று (7) யாழில் ஊடகங்கள் முன்பாக இதனை தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஆரம்பத்தில் இந்த ஒழுங்கமைப்பை விளம்பரப்படுத்தாமல் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதன் பின்னர் பகிரங்கப்படுத்த விரும்பியிருந்தோம். ஆனால் இது ஊடகங்களில் வெளியான பின்னர் விமர்சனங்கள் எழுந்தன. சிறுவர்களின் முயற்சி, தேவையில்லாத முயற்சியென விமர்கிக்கப்பட்டது. ஆனால் இது எமது தோல்வியல்ல.
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் இருந்தன. தமிழர் சார்பில் ஒருமித்த குரலாக, பலமாக இருக்க வேண்டுமென நாம் அனைத்து கட்சிகளையும் அழைத்தோம். இதிலிருந்து 13 அம்ச கோரிக்கை தயாரிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பங்குபற்றிய ஆறு கட்சிகளும் 13 அம்சங்களை ஏற்றுக்கொண்டது. பின்னர் ஒரு கட்சி வெளியேறி விட்டது.
இந்த கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களிடம் முன்வைத்து, அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எந்த பிரதான வேட்பாளர்களுடன் இது பற்றி பேசப்படவில்லை. இங்கு ஊடகங்களிற்கு ஒன்றை சொல்வது, தெற்கில் ஒன்றை சொல்வது என செயற்பட்டுள்ளனர். தெற்கில், யாருடனும் இந்த கோரிக்கையை முன்வைத்து பேசவில்லையென தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
இது பல்கலைகழக மாணவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு.
இந்த 13அம்ச கோரிக்கைகளை எழுதிக் கொண்டிருந்தபோதே, எந்த ஜனாதிபதி வேட்பாளரும் இதை ஏற்க மாட்டார்கள் என்பது அவர்களிற்கு முதலே தெரிந்திருந்தது. ஆனால் அணுகுமுறை தொடர்பான தெளிவாக கூறியிருக்கவில்லை. 13 அம்ச கோரிக்கைக்கு முன்னர் அணுகுமுறை தொடர்பாக முடிவுக்கு வர வேண்டுமென நாம் கூறியபோது, இல்லை, நாம் ஆதரிக்கப் போவதில்லை, சரியான நாம் பாடம் படிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கித்தான் 13 அம்ச கோரிக்கை எழுதப்பட்டது.
அனால் கோரிக்கையில் ஒன்றுபட்ட 5 கட்சிகளும் அணுகுமுறை என்ற விடயத்தில் தவறியுள்ளன.
விக்னேஸ்வரன் முந்திக்கொண்டு அறிக்கை விட்டார். எந்த வேட்பாளரையும் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவர் மறைமுகமாக கூட்டியுள்ளார். அது சரி பிழைக்கு அப்பால், கூட்டு முயற்சியாக எடுத்த நடவடிக்கையின் போது அவர் முந்திக்கொண்டு நடந்ததை தவறாக சுட்டிக்காட்டுகிறோம்.
இதையடுத்து நடந்த கூட்டத்தில் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னர் நாம் ஒரு செய்தியை சொல்ல வேண்டுமென, சுமந்திரன் கைப்பட எழுதிய அறிக்கையைத்தான் நாம் அன்று வாசித்தோம். சஜித் பிரேமதாசவின் அறிக்கை வந்ததன் பின்னர் கூடி முடிவெடுப்பதாக எழுதித்தந்த நிலையில், தாமாகவே ஒரு வேட்பாளரை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
எந்த விதத்தில் சுட்டிக்காட்டினார்களோ தெரியவில்லை. 13 கோரிக்கைகளின் இறுதியில், புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாதங்களில் இதை நிறைவேற்ற வேண்டுமென குறிப்பிபடப்ட்டுள்ளது. அதை முன்வைத்துத்தான் வேட்பாளரை அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பார்கள் என நினைக்கிறோம்.
13அம்ச கோரிக்கை வலுவற்றவை இதைவிட வலுவானவற்றையே அங்கு வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்திருந்தார்கள். ஆனால் தேர்தல் விஞஞாபனங்களில் வலுவான விடயங்கள் எதுவுமில்லை.
13 அம்ச கோரிக்கையில் சமஷ்டி விடயத்தை தவிர்ந்த ஏனையவை அத்தியாவசிய பிரச்சனைகள். அதாவது 3 மாதத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 3 மாதங்களின் பின்னரே நாடாளுமன்ற தேர்தல் வரும். நேரடியாக வேட்பாளர்ளை சுட்டிக்காட்டியவர்கள், நாடாளுமன்ற தேர்தலின் முன்னர் இந்த விடயங்களை தீர்த்து தர வேண்டும். இல்லையென்றால் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்.
எவர் ஜனாதிபதியாக வந்தாலும், தமிழ் மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழ் பிரதிநிதிகள் எமக்கு சரியாக அமைய வேண்டும். இந்த கோரிக்கைகள் விடயத்தில் எல்லோரையும் முட்டாளாக்கியவர்கள் இதற்கு சரியான உத்தரவாதம் வழங்க வேண்டும். இதற்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனர்.