ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 16, 2019

ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாராலும் பேருந்தில் பயணித்த 10 பேர் தருமபுரம் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டை, கூழாவடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதலுக்கு ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் முயற்சித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் கொலைக் குற்றச்சாட்டு வழக்குள்ளது. அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் உள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலும் 10 பேர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனரென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.