திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 15 மணி நேரமாக நடந்து வருகிறது. இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குழந்தை விழுந்துள்ள ஆழ்துளையில் மண் மூடியதால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்குள் 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன் விழுந்தான். நேற்று (5) மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தையை கேமிரா, மைக், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளுடன் மீட்கும் பணி நடந்து வருகிறது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து பேரிடம் மீட்புக் குழுவும் நடுகாட்டுபட்டிக்கு விரைந்துள்ளது.
இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், கடைசி முயற்சியாக நவீன கருவிகளை கொண்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 அடியில் இருந்து 70 அடி ஆழ்திற்கு சென்று விட்ட குழந்தையின் கைகளில் கயிறு கட்டி எடுக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், ஆழ்துளையை சுற்றி 4 புறங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க மத்தியக் குழுவின் உதவியையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தையின் நிலை என்ன?
குழந்தை பயப்படாமல் இருக்க வெளிச்சம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி வரை குழந்தையின் குரல் கேட்டதாகவும், அதற்கு பிறகு குரல் ஏதும் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 70 அடி ஆழத்திற்கு சென்று விட்டதால் குழந்தை மயக்கமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆழ்துளையில் மண் மூடியது
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலில் குழந்தையில் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. தற்போது குழந்தை உள்ள ஆழ்துளையில் மண் மூடியதால் குழந்தையில் குரலை கேட்க முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீட்புப் பணி சவாலாக உள்ளது. டாக்டர்கள் குழு தயாராக உள்ளதால் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டாலும் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட முடியும். ஆழ்துளையில் மண் மூடியதால் குழந்தையில் தற்போதைய நிலையை அறிய முடியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என்றார்.