நாட்டில் எல்லோருமாக இணைந்து பெற்றுக் கொண்டதே யுத்த வெற்றி. ஆகையினால் அந்த யுத்த வெற்றியை தனிநபர்கள் உரிமை கொண்டாட முடியாது. யுத்த வெற்றி என்பது தனிநபர் வெற்றியும் அல்ல என இன அழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தல் காணாமலாக்கப்படடுதல் தாக்குதல்கள் என்பன துரதிஸ்ரம் என்றும் அதனை இராணுவமோ, பொலிசோ, அரசோ செய்யவில்லை என்றும் அதனை குழுக்களே செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (30) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
எனக்கு இந்த இடம் புதிதல்ல. இங்குள்ள மக்களுக்காக இந்தப் பிரதேசத்தில் நான் கடமையாற்றியிருக்கிறேன். இங்குள்ளவர்களின் பிரச்சனைகள் தேவைகள் எனக்கும் தெரியும். ஆகையினால் அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த பல வருடங்களாக நான் இராணுவத்தில் இருந்திருக்கின்றேன். இராணுவத்தில் இருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றியிருக்கிறேன். இப்போது தேர்தலில் போட்டியிட்டு நாட்டுக்கு இன்னும் சேவை செய்யவே வந்திருக்கிறேன்.
நாட்டு மக்கள் அரசியல்வாதிகளால் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சிங்களவர், தமிழர், முஸ்லிம் என இன ரீதியாகவும் அதே நேரம் இந்து, பௌத்தம், இஸ்லாம் என மத ரீதியாக ஆட்சியார்களால் பகுக்கப்பட்டு பல பிரிவுகள் காணப்படுகிறது.
இந்த நாட்டில் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தான் யுத்தத்திற்கு நாட்டை இட்டுச் சென்றது. இதனாலேயே கடந்த 30 வருடமாக நாட்டில் யுத்தமும் நடைபெற்றது. இதனால் தமிழர் சிங்களவர் என இரண்டு பக்கத்திலுள்ளவர்களுக்கும் போராட்டமாகவே வாழ்க்கை அமைந்தது.
ஆகவே இந்தப் பிரிவினைகளிலிருந்த விடுபட்டு வடக்கு தெற்குக்கு இடையில் பாலம் அமைத்து அனைவரும் ஒன்றாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை ஏனையவர்களை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில் கடமையிலிருந்த காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் மக்கள் அரசியல்வாதிகளின் பின்னால் சென்றதால் இன்று அழுதுகொண்டு இருக்கின்றனர். ஆனால் நான் ஒரு சுயேட்சை வேட்பாளர். எனக்கு கட்சியில்லை. நான் நாட்டின் அரசியல்வாதியும் அல்லன். நான் நாட்டின் சேவையாளன். இந்தத் தேர்தலுக்காக எங்களிடமுள்ள பணத்தையே நாங்கள் செலவு செய்து வருகிறோம்.
இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பு கல்வி போன்றவற்றையே கேட்கிறார்கள். யுத்தத்தின் போது கல்வி பெரியளவில் பாதிக்கப்பட்டு காணப்பட்டது. இளைஞர்கள் தொழில் இல்லாமல் வாழ்க்கை நடாத்துகிறார்கள். யுத்தங்களுக்கு முற்பட்ட காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வடக்கில் காணப்பட்டன. இன்றைக்கு அவற்றைக் காண முடிவதில்லை.
நாங்கள் மக்களின் காணிகளை கையளித்துள்ளோம். மிதிவெடிகளை அகற்றியுள்ளோம், 13 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு வழங்கியுள்ளோம். இது மட்டுமல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். ஆகவே தான் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் எமக்குத் தெரியுமென்றும் அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் நாம் கூறுகின்றோம்.
குறிப்பாக காணிப்பிரச்சனையில் 92 வீதமான அரச காணிகளும்இ 80 வீதமான தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது 3000 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படாமல் உள்ளது. அது இராணுவ முகாமோடு சுற்றயுள்ள பிரதேசதம். அந்தப் பிரதேசத்திற்குள் தான் பலாலி விமான நிலையம் அமைந்து காணப்படுகிறது. அதனால் அதை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே அந்தக் காணியின் உரிமையாளர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் கடத்தல், காணாமல் செய்யப்பட்டது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது போன்ற விடயங்கள் இடம்பெற்றது துரதிஸ்ரவசமானது. இதனை இராணுவமோ பொலிஸாரரோ, ஏன் அரசோ செய்யவில்லை. ஏனெனில் அரசோ பொலிசோ இராணுவமோ இவற்றைச் செய்ய அதிகாரம் இல்லை.
ஆகவே அது குழுக்களாலேயே செய்யப்பட்டிருக்கலாம். நான் ஆட்சிக்கு வந்தால் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதே நேரம் இப்ப எடுக்கப்படுகின்ற விசாரணைகளையும் வேகப்படுத்துவேன். அந்த விசாரணை நடவடிக்கைகளின் போது கட்சிகளோ அல்லது நபர்களோ கணக்கில் கொள்ளப்பட மாட்டார்கள்.
மேலும் நான் முப்பது வருடமாக இராணுவத்தில் தொண்டாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் இன்றைக்கு யுத்தத்தை வெற்றி கொண்டது தொடர்பாக பலரும் பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுபவர்கள் சில காலம் தான் இரானுவத்தில் பணியாற்றியிருக்கின்றார்கள். ஆகவே யுத்த வெற்றி என்பது தனிநபர் வெற்றியல்ல. அது எல்லோரும் இணைந்த வெற்றியாகவே காணப்படுகிறது.
அதாவது சமூக மட்ட தலைவர்கள்இ சமய தலைவர்கள்இ பொது மக்கள் என அவனைவரும் இணைந்து பெற்றுக் கொண்டது தான் யுத்த வெற்றி. அவ்வாறு எல்லோருமாக இணைந்து பெற்ற வெற்றியை தனிநபர்கள் உரிமை கொண்டாட முடியாது என மகேஸ் சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.