கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக
கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.
கொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் பெண்ணை இழுத்து வந்து உடையை
அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும்
சித்திரவதை செய்துள்ளான் என்று நீதி விசாரணைகளில் தெரியவந்தது.
வயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரன் அபகரித்துச்
சென்றுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப
பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக
மீட்கப்பட்டார்.
அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61)
என்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில்
வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல்
பொலிஸார் மீட்டனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர்
உ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான்,
சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.