கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படை முகாம்களினுள்ளே இடம்பெற்ற சித்திரவதைகள் காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) இலங்கை அரசுடனான கடற்படை கூட்டுறவினை மீள்பார்வை செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளது.
‘முற்றாக பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை’ எனும் தலைப்பிலான 112 பக்கங்களை கொண்ட புதிய அறிக்கை ஒன்றினை நேற்று (23) வெளியிட்டுள்ள ITJP தனது ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இப்புதிய அறிக்கையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் கடற்படையினர் நிலக்கீழ் சித்திரவதை முகாம்களை இயக்கியமை குறித்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் கடற்படைத்தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாமினை இயக்கியிருப்பதாகவும் அங்கு பல சிறைக்கைதிகளை பல ஆண்டுகளாக நிலக்கீழ் அறைகளில் தடுத்துவைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை கடற்படை கட்டளை அமைப்பின் அனுமதி இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அந்த இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டுவரப்படுவதும் விசாரிக்கப்படுவதும் உணவு வழங்கப்படுவதும் காவல் காக்கப்படுவதும் சாத்தியமற்றது என அந்த அறிக்கை வாதிடுகின்றது.
மேலும் திருகோணமலை கடற்படைத்தளத்தி 11 பேர் காணாமற்போனமை பற்றி இலங்கைக்கு உள்ளே 10 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் தப்பி பிழைத்தவர்களிடமும் மற்றும் உள் சாட்சியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட வாக்கு மூலங்களுடன் ஒப்பீடு செய்துள்ள இந்த அறிக்கையானது பாரதூரமான விசாரணைத்தவறுகள் கருத்து வேற்றுமை அரசியல் தலையீடுகள் போன்றவற்றை குறித்த வழக்கில் அடையாளம் கண்டுள்ளது.
இலங்கையில் சிவில் போர் முடிவடைந்ததுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் நிறுத்தப்படவில்லை. அத்துடன் சித்திரவதை ஒரு கடற்படைத்தளத்தில் மட்டும் இடம்பெறவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்படட்டுள்ளது.