நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 1, 2019

நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு!




முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளகத்தில் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாராதிபதி கொலம்பகே மேதலங்கார கீர்த்தி தேரர் புற்றுநோயால் கடந்த 21ம் திகதி உயிரிழந்தார்.

அவரது உடலை நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி கடந்த 24ம் திகதி ஆலய வளாகத்தில் தகனம் செய்தனர். இதன்போது நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி கே.சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகளும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான பி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, தாக்குதல் நடத்தியவர்களை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யவுள்ளதாக பொலிசார் மன்றிற்கு அறிவித்தனர்.

இதையடுத்து வரும் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.