முல்லைைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு கடந்த மாதம் மரணமடைந்த நிலையில். குறித்த பிக்குவினுடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி, ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து நீராவியடிப்பிள்ளையார் ஆலய கேணிப்பகுதியில் தகனம் செய்திருந்தனர்.
இந் நிலையில் இவ்வாறு இடம்பெற்ற இந்த துர்சம்பவத்தையடுத்து, விசேட சாந்தி பூசை நிகழ்வொன்றை இன்று (11) நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இதன்போது, ஆலய வளாகத்தில், விசேட சாந்தி பூசை நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, அந்தப்பகுதிக்கு வந்த பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தார்.
ஆலய வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர், பொலிஸாரிடம் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகுறித்து முறையிட்டபோதும், பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இதனால் அங்கு வழிபாடுகளுக்காக வந்த தமிழ் மக்களுக்கும், குறித்த நபருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. இதன்போது அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த நபருக்கு ஆதரவாக செயற்பட்டதுடன், தமிழ்மக்களை விலகுச்செல்லுமாறு கூறியதைக் காணக்கூடியதாகவிருந்தது.