தன்னைவிட அழகாக இருந்ததால் ஏற்பட்ட பொறாமையால், மொடல் அழகி ஒருவர் தன் தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.
சென் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). தாய், தந்தை இல்லாததால் சகோதரிகள் இருவரும் சிறுவயதில் அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். வளர்ந்த பிறகு இருவரும் மொடலிங் துறையில் சேர்ந்தனர். எலிசவெட்டா மற்றும் ஸ்டெபானியா ஆகிய இருவருமே சிறந்த மொடல் அழகிகளாக விளங்கினர். அத்துடன் இருவரும் இணை பிரியா சகோதரிகளாக இருந்து வந்தனர். எனினும் தங்கை ஸ்டெபானியா தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் அவர் மீது எலிசவெட்டாவுக்கு பொறாமை இருந்து வந்தது.
இந்த பெறாமை அவரது கண்ணை மறைத்தது. தாய், தந்தைக்கு ஈடாக பாசத்தை கொட்டி வளர்த்த தங்கை என்றும் பாராமல் ஸ்டெபானியாவை கொலை செய்ய எலிசவெட்டா முடிவு செய்தார். கடந்த 2016ம் ஆண்டில் ஒரு நாள், ஸ்டெபானியா தனது காதலர் அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி எலிசவெட்டாவும் சென்றார். அப்போது, அலெக்சி பதேவ் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
இதையடுத்து, தனியாக இருந்த ஸ்டெபானியாவை, எலிசவெட்டா கத்தியால் சரமாரியாக குத்தினார். தங்கையின் அழகின் மீது இருந்த பொறாமையின் உச்சக்கட்ட வெளிப்பாடாக அவரது உடலில் 189 முறை கத்தியால் குத்தினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். அப்படியும் அவர் ஆத்திரம் அடங்காததால் தங்கையின் வலது காதை அறுத்து எடுத்ததோடு, கண்களையும் நோண்டி எடுத்தார்.
இந்த கொடூர கொலை வழக்கில் எலிசவெட்டா கைது செய்யப்பட்டு சென் பீட்டர்ஸ்பர்க் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் எலிசவெட்டா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.