நிறைவேற்றதிகார ஒழிப்பிற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு: கைவிடப்பட்டது ரணிலின் கடைசி நேர திட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 19, 2019

நிறைவேற்றதிகார ஒழிப்பிற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு: கைவிடப்பட்டது ரணிலின் கடைசி நேர திட்டம்!

நிறைவேற்றதிகாரத்தை இல்லாமலாக்கும் யோசனைக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை சமர்ப்பித்தார். எனினும், பெரும்பாலான அமைச்சர்கள், இதை எதிர்த்தனர்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என குறிப்பிட்டு, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு தனிநபர் பிரேரணையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜே.வி.பி அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை வரவழைத்து இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதித்தார்.

சிவில் அமைப்புகளின் வேண்டுகோளாக இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ரவி கருணநாயக்க மற்றும் ராஜித சேனரத்ன ஆகியோர் மட்டுமே இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஏனைய அனைத்து அமைச்சர்களும் அதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பட்டலி சம்பிக ரணவக்க, பி.திகம்பரம், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரல ஆகியோர் இந்த திட்டத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதால், இந்த நேரத்தில் நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க நடவடிக்கையெடுப்பது பொருத்தமானதல்ல என அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,

“தேர்தல் ஆணையம் ஜனாதிபதித் தேர்தல்களிற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என்று சூடான வாதப் பிரதிவாதங்ளுக்குப் பின்னர் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒருமனதாக முடிவு செய்தது. அரசாங்க அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்று வெற்றி பெறுவோம்’ என்று அறிவித்தனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.