இளைஞர்களிற்கு எமது வரலாறு தெரியவில்லை; இனி சொல்வோம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 4, 2019

இளைஞர்களிற்கு எமது வரலாறு தெரியவில்லை; இனி சொல்வோம்!இன்றைய இளைஞர்களிற்கு எமது வரலாறு தெரியவில்லை. அதனால்தான் எம்மை விமர்சிக்கிறார்கள். அது எமது குறைபாடாகவும் இருக்கலாம். எமது வரலாற்றை நாம் சரியாக சொல்லாமல் விட்டு விட்டோம். இனி அந்த குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்றார் மாவை சேனாதிராசா.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணத்துவம் வாய்ந்தவர்களினால் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் என குற்றம்சுமத்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய நியமனங்களுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவையின் உயரதிகாரிகள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளார்கள், அவர்கள் மட்டுமன்றி பல நாட்டு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்இ இத்தகையவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அல்லது அதிகாரத்தை பெற நினைப்பது ஆபத்தானது. போர்க்காலத்தைவிட இலகுவாக எமது இனத்தை அழித்து, அடக்குவதற்கு, அரசியல் விடுதலையை பெற சந்தர்ப்பம் இல்லாமல் செய்துவிடக்கூடிய சாத்தியப்பாடுகள் எதிர்காலத்தில் தென்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.பாராளுமன்றத்தி் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போது எதிர்த்தவர்கள். 2015இல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாங்கள் அமைச்சு பதவிகளை ஏற்காமல் விட்டாலும், ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பிற்காக ஆதரவளித்தோம்.

இந்த ஆதரவுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலைமையில்தான் செப்ரெம்பர் மாதக்குழப்பம் வந்தது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட்டார். இந்த குழப்பத்தை எந்த நாடும் ஆதரிக்கவில்லை. இலங்கையுடனான ஒப்பந்தங்களை பல நாடுகள் நிறுத்தினார்கள். இந்த சூழலை பலர் மறந்து விட்டனர். பல ஊடகங்கள் இவற்றை மறந்து விட்டன.


எமக்கு 2009 இன் முன்னர் புலிகளின் பலம் இருந்தது. இன்று அது இல்லை. தற்போதைய பலம் ஐ.நா சபைதான்.

எம்மை கொலை செய்தவர்கள் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம், அதை செய்வோம், இதை செய்வோம் என பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டார்கள். தமிழர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களிற்கு சிலர் மாலை மரியாதை செய்கிறார்கள்.

இளம் சமூகத்திற்கு எமது கடந்தகால வரலாறு தெரியாமல் உள்ளது. அது எங்களது குறைபாடாகவும் இருக்கலாம். எமது கடந்தகாலம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விளக்கமளிக்காமல் விட்டுவிட்டோம். இனிவரும் காலங்களில் நாம் அவதானமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டபோது அவரை ஆதரிப்பதா இல்லையா என்பதில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. எனினும், முள்ளுக்கம்பிக்குள் இருந்த மக்களின் நிலையை அவதானித்துதான் வாக்குகள் அளித்தோம்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை எமது மக்களுடனும், சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் நன்றாக ஆராய்ந்தே முடிவுகளை எடுப்போம் என்றார்.