ஆட்சியை காப்பாற்ற சட்ட மேதாவித்தனத்தை காட்டும் தமிழ் சட்டத்தரணிகள் தமிழர்களிற்கு செய்ததென்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 4, 2019

ஆட்சியை காப்பாற்ற சட்ட மேதாவித்தனத்தை காட்டும் தமிழ் சட்டத்தரணிகள் தமிழர்களிற்கு செய்ததென்ன?

தமிழ் சட்டமோதாவிகள் இருளில் இருக்கும் மக்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எந்த ஆட்சியாளர்களிடமிருந்து பணப்பெட்டிகள் வழங்கப்படுகிறதோ அந்த ஆட்சியைக் காப்பாற்றவே தமிழ்த் தரகுச் சட்ட மேதாவிகள் தங்களது சட்ட மேதாவித்தனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆட்சியைத் தக்கவைக்க சட்ட வல்லுமையைப் பயன்படுத்துவோர் மீட்சியின்றி சிறையில் வாடுவோரை மீட்க உதவினார்களா?. இல்லை. மாறாகஇ எஞ்சியிருக்கும் முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளையும் தமக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவர்களையும் உள்ளே தள்ளும் கைங்கரியத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.

1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘அரசின் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகள் பலவுள்ளன. குறிப்பாக, தற்போதுள்ள, காலங்கடந்த சட்டங்களை திருத்த வேண்டியுள்ளன.

நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்பிலான செயற்பாடுகளில் காணப்படுகின்ற பலவீனங்களை அகற்றி, அச் செயற்பாடுகள் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும்.


நீதிமன்றங்களினதும், நீதிபதிகளினதும்; எண்ணிக்கையினை அதிகரிப்பதுடன், வளங்களும் போதியளவில் அதிகரிப்படல் வேண்டும்.

மொழிப் பிரச்சினைகள் காரணமாக வழக்குகள் தாமதிக்காதிருக்கும் வகையில் அந்தந்த மொழிகளில் பரிச்சயம் கொண்ட நீதிபதிகள் போதியளவில் தேவைக்கேற்ப நியமிக்கப்படல் வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கென இணைத்துக் கொள்ளப்படுகின்ற சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், திணைக்களத்தின் ஏனைய பணியாளர் சபையினையும் விரிவுபடுத்தப்படல் வேண்டும்.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பிலான விடயங்களின்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தப்படல் வேண்டும்.


அதேநேரம், இந்த நாட்டிலே சுமார் 300க்கும் மேற்பட்ட மத்தியஸ்த சபைகள் செயற்பட்டு வருவதாகவும், அவற்றிலே சுமார் 7000க்கும் அதிகமான மத்தியஸ்தர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கையின் மத்தியஸ்த சபை முறைமை என்பது உலகின் பாரிய மத்தியஸ்த சபை முறைமையில் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தை வகித்து வருவதாகவும் கூறப்படுகின்ற நிலையில், இந்த மத்தியஸ்த சபை முறைமை தொடர்பிலும் மிக அதிகளவிலான அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

சட்டம் என்பது ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் என்பது ஒரு விளக்கு. அது ஏழைகளுக்கு எட்டாத விளக்கு என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. உண்மையும் அர்த்தமும் நிறைத்த இந்த அறிவுரை அழிவு யுத்தத்தின் வடுக்களை இன்னமும் சந்தித்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கே பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சட்டம் படித்த தமிழ் மேதாவிகள் அதிகாரத்தில் இருந்தும் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவொரு ஒளியேற்றமும் இங்கு நடந்ததில்லை.

எந்த ஆட்சியாளர்களிடமிருந்து பணப்பெட்டிகள் வழங்கப்படுகிறதோ அந்த ஆட்சியைக் காப்பாற்றவே தமிழ்த் தரகுச் சட்ட மேதாவிகள் தங்களது சட்ட மேதாவித்தனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆட்சியைத் தக்கவைக்க சட்ட வல்லுமையைப் பயன்படுத்துவோர் மீட்சியின்றி சிறையில் வாடுவோரை மீட்க உதவினார்களா?. இல்லை. மாறாக, எஞ்சியிருக்கும் முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளையும் தமக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவர்களையும் உள்ளே தள்ளும் கைங்கரியத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.இதைச் சுட்டிக்காட்டும் நூறுவீத அருகதை எனக்குண்டு. களுத்துறைச் சிறையில் என்னைத் தாக்கியவர்களுக்கு எதிராக என்னைச் சாட்சி சொல்ல நீதிமன்றம் அழைத்தது.

எய்தவன் இருக்க அம்பை எதற்கு நோவான் என்ற அடிப்படையில் நான் சாட்சி சொல்லச் சென்றிருக்கவில்லை. என்னைக் கொல்ல தற்கொலையாளியை அழைத்து வந்த பெண்மணி இன்னமும் சிறையில் இருக்கிறாள். அந்தப் பெண்மணியைக்கூட விடுதலை செய்யுமாறு நான் கேட்டும் நீதிச்சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை.

நான் சட்ட மேதாவி அல்ல. ஆனாலும் சட்ட மேதைகள் என்னருகிலும் இருந்திருக்கிறார்கள். இன்னமும் சட்ட ஆலோசகர்கள் என்னுடன் இருந்து வருகிறார்கள்.

சட்டத்தரணியும் மனித உரிமை வாதியுமான அமரர் மகேஸ்வரி வேலாயுதம் ஊடாக பலநூறு சிறைக்கைதிகளை விடுவித்து அவர்களை நான் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்த வரலாறு எனக்குண்டு.

அழிவு யுத்தம் முடிந்த கையோடு பன்னீராயிரத்து ஐந்நூறு புலிகள் இயக்கப் போராளிகளை மீட்டெடுத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பெரிதும் பங்காற்றி இருக்கின்றேன்.

இத்தகைய எனது பெரும்பணிக்குச் சட்டத்தை விடவும் நான் அங்கம் வகித்திருந்த அரசுடனான நல்லிணக்க உறவின் திட்டங்களே காரணம்.

நான் சிறை மீட்டவர்கள் எவரையும் புலி என்றோ அல்லது வேறு எவறென்றோ பேதம் பார்த்தது இல்லை. எல்லோருமே நான் நேசிக்கும் எமது தமிழ்த் தேசத்தின் பிள்ளைகளாகவே இன்னமும் நான் பார்க்கிறேன்.

காலம் ஒரு செங்கோலை எம் கையில் விரைவில் தரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்போது, சிறைக்கைதிகளை மட்டுமன்றி அவலப் பெருங்காட்டில் அடைபட்டிருக்கும் அனைத்து மக்களையும் நான் மீட்டெடுப்பேன்’ என்றார்