குண்டு வீச்சில் தப்பிய ரவுடி சரமாரி வெட்டிக்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, September 4, 2019

குண்டு வீச்சில் தப்பிய ரவுடி சரமாரி வெட்டிக்கொலை!புதுச்சேரியில் கோவில் திருவிழாவில் வெடிகுண்டு வீசியதில் தப்பிய ரவுடியை, மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் அருகே பதுங்கி இருந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி வாணரப்பேட்டை ஏ எப் டி திடல் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

இதில் பிரபல ரவுடியான சாணிக்குமார் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் முக மூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சாணி குமாரை குறி வைத்து நாட்டு வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது.

ஆனால் அது குறி தவறி சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், கூட்டத்தினர் நாலா புறமும் சிதறி ஓடினர். சாணிக்குமாரும் தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் அப்துகலாம் நகரில் உள்ள சாணிக்குமார் வீட்டின் அருகே பதுங்கி இருந்துள்ளனர். நள்ளிரவில் சாணிக்குமார் வந்ததும் அக்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார், சாணிக்குமார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் யார், எதற்காக தாக்குதல் நடத்தினர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சாணிக்குமார் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைவர் என்றும், ராஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாணிக்குமார், சிறையில் நன்னடத்தையின் பேரில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்து மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.