தமிழகத்தில் உரிமையாளரின் கண்முன்னே பல லட்சம் ரூபாய் பணத்துடன் காரை ஓட்டுனர் கடத்தி சென்ற சம்பவத்தில், அந்த நபர் உல்லாச வாழ்க்கைக்காக தான் இப்படி செய்தேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
கோயமுத்தூர் மாவட்டம் நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 4-ஆம் திகதி தோட்டத்தை விற்று 40 லட்சம் பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது பணப்பையை எடுத்து வருமாறு ஓட்டுனர் கிஷோரிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார்.
ஆனால் ஓட்டுனர் கிஷோர் திடீரென்று பணத்துடன் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
பணத்துடன் சென்ற கிஷோர் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் 15 நாட்களாக புதுச்சேரி, பெங்களூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணத்தை செலவு செய்து சுற்றி திரிந்துள்ளார் என்பது பொலிசாருக்கு தெரியவந்ததால், இரண்டு பேரையும் கையும், களவுமாக பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின் பொலிசார், திருடிய பணத்தில் அவர்கள் வாங்கிய நகை, செல்போன் மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடமிருந்த காரையும் கைப்பற்றினர்.
கிஷோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உல்லாசமாக பணம் செலவழித்து வாழ்வை மகிழ வேண்டும் என்பது தனது ஆசை என்பதால், இப்படி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளான்.