பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச அதிகாரிகள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகமென பல்வேறு பகுதிகளிலும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள், பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதற்கமைய மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும் பெரும்பாலான வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சைக்காக சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை, சில வைத்தியசாலைகளில் மாத்திரம் தாதிமார்களால் வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.