முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்ட விவகாரம், இன்று தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற சட்டத்தை காலடியில் மிதித்து, இந்த அடாவடியில் முன்னின்றவர் பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.
பிக்குவின் உடலை தகனம் செய்வது பற்றிய வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்ற ஞானசாரர் , தீர்ப்பு என்னவாக இருந்தாலும் இருக்கட்டும், பிக்குவின் உடலை தகனம் செய்யப் போகிறோம் என கூறிவிட்டு சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, ஞானசாரர் அப்படி நடந்து கொண்டதன் பின்னனியில் , ஏதாவது உள்நோக்கம் உள்ளதா என்பதோடு இதன் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியும் சமூகத்தில் உள்ளது.
ஏனெனில், ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதாவது இன வன்முறையை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சித்தார்களா? அப்படியானால், இதன் பின்னணியில் யார் இருப்பார்கள்? என்பது ஆழமாக சிந்திக்கவேண்டிய விடயம்.
இதேவேளை பொதுபலசேனவை நீண்டகாலமாக போஷித்து வருபவராக அறியப்படும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமாதிபாலவின் சகோதரர் ஜகத் சுமதிபால அன்றைய தினம் முல்லைத்தீவில் பிரசன்னமாகியிருந்தார்.
ஜகத் சுமதிபால பௌத்த மத நலன்கள் தொடர்புடைய சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகிறார். எனினும், அவர் அன்றையதினம் எதற்காக முல்லைத்தீவு வந்தார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
புத்த பிக்குவின் உடல் எரித்த விவகாரத்தில் ஞானசாரர் கருவி மட்டுமே… அதன் பின்னணியில் ஞானசாரரை இயக்கியது யார் என்பது தான் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி.