பிரான்சில் சிறப்படைந்த தமிழியல் பட்டகர்களின் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 19, 2019

பிரான்சில் சிறப்படைந்த தமிழியல் பட்டகர்களின் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு!

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் நடாத்தப்படும் தமிழியல் பட்டகர்களின் தியாகதீபம் திலீபன்அறிவாய்தல் அரங்கு ஐந்தாவதுஆண்டாக கடந்த 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிசின் தென்கிழக்கு நகரானகிறித்தையில் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் சரியாக முற்பகல் 11.01 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆய்வு நூல்வெளியீட்டைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. காலத்தேவைக்கேற்ப தலைப்புகளுடன் ஆழமான ஆய்வுகளை பட்டகர்கள் மேற்கொண்டிருந்தனர் .
‘தமிழ் பிரெஞ்சு பழமொழிகள் ஒரு தொகுதிநிலை ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் நா.சோபியா அவர்களும்,’தமிழரின் ஓகக்கலையும் அதன் வாழ்வியல் நெறிமுறைகளும்’ என்ற தலைப்பில் சி.தனசீலன் அவர்களும்‘ பிரான்சில் வேலைபார்க்கும் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற ஆய்வை செ.ஜெயமதி அவர்களும் ‘தமிழ் எழுத்துருக்களின் தோற்றமும் அவற்றில் வெளிப்பட்டுநிற்கும் அறிவியல் உண்மைகளும்’ எனும் தலைப்பில் கலாநிதி சி.தனராஜா அவர்களும் ‘ஈழச்சிக்கலில் இலங்கைத்தீவின் அமைவிடத்தாக்கமும் மீட்சிக்கான முனைவுகளும்’ எனும் தலைப்பில் சி.சிவகுமார்அவர்களும் ‘பிரான்சு நாட்டில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் கட்டமைப்பு அடிப்படையிலான செயல்முனைப்புகள்’ எனும் தலைப்பில் ஜெ.யோகேஸ்வரி அவர்களும் ஆய்வுகளை வழங்கியிருந்தனர்.
ஆய்வுகளுக்கு இடையே கிறித்தே தமிழ்ச்சோலை மாணவியர்களின் நடனஆற்றுகையும் தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பு குறித்த வில்லுப்பாட்டொன்றும் இடம்பெற்றது. வழமையான வில்லிசைப்பாட்டுகளுக்குப் புற ம்பாக புதிய வடிவிலும் புதிய பாடல் மெட்டுகளுடனும் காணப்பட்டதோடு அரங்கில் இருந்த பலரின் கண்களைக் குளமாக்கியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
ஒவ்வோர் ஆய்வும் புதிய வித்தியாசமான ஆழமான பரிமாணத்தில் காணப்பட்டதோடு எதிர்காலத்திற்குத் தேவையான ஏராளமான பரிந்துரைகளை மொழி, அரசியல், சமூக, பெண்ணியல் தளங்களுக்கு வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சிறப்பு உரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இவ்வாறான நிகழ்வுகள் சமூகத்தின் மத்தியில் நிகழ்த்தப்படவேண்டியது அவசியம் என்பதாக அவரது உரைதொடர்ந்தது.
நிகழ்ச்சிகளை பா.பார்த்தீபன் தமிழிலும், இ.சந்திரின் பிரெஞ்சிலும் தொகுத்துவழங்கினர். அரங்குநிறைந்து அமைதியாக ஆய்வுகளை மக்கள் கவனித்தமையானது கருத்தியல் தேடலில் எமதுமக்கள் ஆர்வமாய் உள்ளதை எடுத்தியம்பியது. இவ்வாறான ஆய்வுகள் இன்னும் தொடரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மாலை 5.00 மணிக்கு ஆய்வரங்கு இனிதே நிறைவுற்றது.