கோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 20, 2019

கோட்டா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார் ரிஷாட்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் உங்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனரா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ரிஷாட் பதியுர்தீன் சிரித்து மழுப்பியவாறு ஊடகவியலாளர்களை கடந்து சென்றிருந்தார்.

வவுனியா மாங்குளம் அல் ஹாமியா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டதன் பின்னரே ஊடகவியலாளர்கள் அவரிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சியா எனவும் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியிருந்தனர்.

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு இது தருணமல்ல. சிறுபான்மை கட்சிகளை பொறுத்தவரையில் ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே அவ்வாறான எந்தவொரு பிரேரணைக்கும் நாம் ஆதரவு கொடுக்கமாட்டோம்“ என தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சிறுபான்மை கட்சிகள் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன எனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.

“சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசினோம். அவரது கொள்கை, அவர் என்ன செய்யப்போகின்றார் என்பது தொடர்பாகவும் பேசினோம். இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாரத்தில் தமது வேட்பாளரை அறிவிப்பதாக கூறியுள்ளனர். ஆகவே நாங்கள் இது தொடர்பாக எமது கட்சியுடன் பேசி இறுதி முடிவை அறிவிப்போம்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.