நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, "சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன்.
இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்று தான் நடந்தது.
நீங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை" என்றார்.
2018 ம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கிய கமல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார். கமல் போட்டியிடவில்லை என்றாலும், அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இருந்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ரஜினி இதுவரை கட்சி துவங்கவும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை. 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கிய சிரஞ்சீவி, 2009 ம் ஆண்டு நடந்த தேர்தலில், 294 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் சிரஞ்சீவி, திருப்பதி மற்றும் அவரது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் திருப்பதியில் வெற்றி பெற்ற சிரஞ்சீவி, தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.