இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த 58 பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த தனது புதிய விசாரணை அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் சித்திரவதைகளில் ஈடுபடும் 58 பேரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் அதிகாரிகள் நிலையிலுள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
சித்திரவதைகளிற்கு உள்ளான 78 பேரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் பல வருடங்களிற்கு முன்னர் பெயர் குறிப்பிடப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணிபுரிந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை சாதனங்கள், இரத்தக்கறைகள் காணப்பட்ட அறைகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.