சற்று முன் ஜனாதிபதி தேர்தல் புதிய கணிப்பு அம்பலம்~ மீள்தேர்தலுக்கு வாய்ப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 23, 2019

சற்று முன் ஜனாதிபதி தேர்தல் புதிய கணிப்பு அம்பலம்~ மீள்தேர்தலுக்கு வாய்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என்ற புத்தம்புதிய தகவல் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது அம்பலமாகியிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எவருமே வெற்றிபெற முடியாத சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், மறு தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அடுத்தமாத முதல்வாரம் வேட்பு மனுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள் கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டுள்ளதோடு எந்தவொரு தனி வேட்பாளராலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாத நிலைமையே தேர்தலில் ஏற்படும் என்பது ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.

இந்த நிலையை ஒருசில அரசியற் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதோடு, இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜே.வி.பி ஆகிய அரசியல் கட்சிகளோடு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பெரும் குழப்பத்தை அடைந்திருக்கின்ற அதேவேளை, இவ் வேட்பாளர்கள் அனைவரும் அனைத்துவித பிரிவினர்களையும், சக்திகளையும் ஒன்றிணைத்து அனைவருக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான மறைமுகப் போரினை தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்குகின்ற வகையில் 63500 பேரை மாதிரியாகக் கொண்டு 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை இந்தக் கணிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இளைஞர் முன்னணி, ஸ்ரீலங்காவின் முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்களான நாம், நாட்டிற்கான தேசிய இயக்கம், இளைய அரச சேவை ஒன்றியம் ஆகிய பிரிவினர்கள் இதில் பங்களிப்பு செய்திருக்கின்றனர்.

இந்த மக்கள் கருத்துக் கணிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 63500 பேரில் மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், அரச சேவையிலுள்ள அலுவலக அதிகாரிகள், அரச சேவையிலுள்ள ஏனைய ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், பெருந்தோட்டத்துறை மற்றும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள், தனியார் துறையினர், தனியார் கல்வி நிறுவனங்கள், விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், பேரூந்து சாரதிகள், ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தளப் பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், வர்த்தகர்கள், தொழிற்துறையினர், மீனவர்கள், வெளிநாட்டு வேலைபுரிவோர், உயர்கல்வித்துறையினர், சமூக சேவை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி, சிறு கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மாற்றுவழி வேட்பாளர்கள் ஆகியோரது பெயர்களில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 39.24 சதவீத வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய தேசிய முன்னணி 27.12 வீதம் மக்களின் அபிப்பிராயத்தை வென்றுகொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 5.02 வீதம் வரவேற்பு கிடைத்ததோடு ஜே.வி.பி பெற்றுக்கொண்ட அப்பிராயத்தின் வீதமாக 6.89 பதிவாகியது. சிறு கட்சிகளுக்கு 2.74 வீதம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று 11.12 சதவீத மக்கள் கூறிய அதேவேளை, மாற்றுவழி அல்லது இளைய வேட்பாளருக்கு 7.87 சதவீத மக்களுடைய விருப்பம் கிடைத்துள்ளது.

அனைத்து அரசியற் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான அதிருப்தியின் பலனாக 11.12 வீத மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இளைய மற்றும் மாற்றுவழி வேட்பாளர்களுடைய 7.87 வீதத்தை சேர்த்தால் 18.99 வீதம் கிடைக்கின்றது.

அதாவது, தற்போதைய முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தி நிலையை இது வெளிப்படுத்துகின்றது. இதற்கமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இளைய சமுதாயம் தீர்க்கமான சக்தியாக அரசியலில் உருவெடுத்திருக்கின்றது என்பது ஸ்ரீலங்கா இளைஞர் அமைப்பின் கருத்துக் கணிப்பிலிருந்து புலப்படுத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போன்று எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சிறு கட்சிகள் இணைந்து ஒன்றாக போட்டியிட்டாலும் 41.77 வீத வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு இவ்வாறு அனைவரும் ஒன்றாய் போட்டியிட்டாலும் எவராலும் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாது என்பதே கருத்துக் கணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போன்று ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி மற்றும் சிறு கட்சிகள் சரியான முறையில் இணைந்து அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையில், பிரபலமாக அல்லது, எந்தக் கட்சியையும் சாராத ஒரு வேட்பாளரை களமிறக்கினால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க முடியும் என்பதுவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெளிவாகின்றது.

இந்தக் கருத்துக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானம் மிக்க சக்தியாக இளைஞர்கள் காணப்படுகின்ற அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகிய கோட்டாபய ராஜபக்சவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சம அளவிலான மக்களின் அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றிருக்கின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர் பின்வாங்கியிருக்கின்றார்.

எவ்வாறாயினும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் கிடைத்துள்ள வாக்குக் கணிப்பீட்டிற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச 30.36 வீதத்தில் முன்னிலை வகிக்கின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒட்டுமொத்த வாக்களின் வீதம் 39.24 ஆக இருக்குமானால் அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளரான தினேஸ் குணவர்தன தனிநபராக பெற்றுக்கொண்ட வாக்குச் சதவீதமாகிய 8.88 வீதமும் அதில் உள்ளடங்கியிருக்கின்றது.

இதேவேளை தனி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ 10.51 வீதத்தையும், ரணில் விக்கிரமசிங்க 8.83 வீதத்தையும், கரு ஜயசூரிய 7.87 வீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியின் மொத்த வாக்குவீதமாக 27.12 காணப்படுகின்றது. இந்தத் தொகையானது பிளவுபடாத முன்னணியாக இருந்தால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எடுகோளுக்கு இணங்க கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு நகர்புறங்களில் உயர் வாக்குவீதம் கிடைத்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு கிராமப் புறங்களில் அதியுயர் வாக்குவீதம் கிடைத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எவருமே வெற்றிபெற முடியாத சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், மறு தேர்தலுக்கான வாய்ப்பு ஸ்ரீலங்காவில் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது