ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எழுக தமிழ் பேரணியூடாக தெளிவான செய்தி வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தமிழ் மக்கள் பேரவை இரண்டு மாபெரும் மக்கள் பேரணியை நடத்தியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வு வரைபொன்றை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது.
பேரவையால் உருவாக்கபட்ட தீர்வு வரைபை அடியொற்றி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் ஏகமனதாக மற்றொரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டு அதுவும் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கபட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லபட்ட விடயங்களை அடியொற்றியே இந்த தீர்வுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் போட்டியிட்டாலும் சஜித் பிரேமதாச போட்டியிட்டாலும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே தமிழ் தலைமைகள் வாக்கு கேட்பார்கள்.
தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கக்பட்டவர்களுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்குதல், வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினால் மேற்கொள்ளபடும் நடவடிக்கைள் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் தெற்கில் இருக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை மக்கள் எழுச்சிப் பேரணியூடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்