எழுக தமிழும் வேண்டும் அதை விட அதிகமாகவும் வேண்டும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 16, 2019

எழுக தமிழும் வேண்டும் அதை விட அதிகமாகவும் வேண்டும்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எழுக தமிழுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். பல்கலைக் கழக ஆசிரியர் சமூகமும் எழுக தமிழை ஆதரிக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முழு மூச்சாக ஒழுங்குபடுத்துவார்களாக இருந்தால் அது ஒரு கட்சிக்கு சார்பானது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவீனமடைந்து விடும்.

மாணவர்களின் அறிக்கை பேரவையை புனரமைக்க வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் அதை எழுக தமிழுக்கான ஒரு முன்நிபந்தனையாக அவர்கள் முன்வைக்கவில்லை – இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பேரவையில் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. அது இப்பொழுதும் அதிக பட்சம் ஒரு பிரமுகர் அமைப்பாகத்தான் காணப்படுகிறது. அதற்குள் அடிமட்ட செயற்பாட்டாளர்கள் குறைவு. அதன் இணைத் தலைவராக விக்னேஸ்வரன் இருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவர். இணைத் தலைவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் பொழுது அந்த அமைப்பு முழு அளவில் ஒரு மக்கள் அமைப்பாக இருக்குமா என்ற கேள்வி உண்டு.

விக்னேஸ்வரனை இணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அகற்றி அவரையும் ஏனைய கட்சித் தலைவர்களையும் பேரவையின் மத்திய குழுவிற்கு உள்ளிழுத்துக் கொண்டு பேரவையை பெருமளவிற்கு மக்கள் மைய செயற்பாட்டாளர்களின் வழிநடத்தலின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று பேரவைகுள்ளேயே குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன.

விக்னேஸ்வரன் இதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துவிட்டார். இம்முறை எழுக தமிழில் அவர் இணைத் தலைவரென்ற பொறுப்பில் பேச மாட்டார் என்று ஒரு தகவல் உண்டு.

இந்த விமர்சனத்தோடு காணப்படும் சில உறுப்பினர்கள் சிலர் இம்முறை எழுத தமிழில் முழுமனதோடு ஈடுபடவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையை புனரமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து எழுத தமிழை குழப்பக் கூடாது என்று முடிவெடுத்திருப்பது கட்சிகளுக்கு முன்னுதாரணமாகும்.

இங்கு ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். பேரவை எனப்படுவது கூட்டமைப்புக்கு எதிரான ஓர் இடையூடாட்டத் தளமாகத்தான் உருவாக்கப்பட்டது. அது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானது என்பது ஒரு கவர்ச்சியான கோஷம்தான்.

ஆனால் நடைமுறையில் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்களே அங்கே ஒருங்கிணைந்தன. எனினும் பின்னாளில் சித்தார்த்தன் அதற்குள் இணைந்தார். இதன் மூலம் பேரவைக்கு கட்சி சார்பற்ற அமைப்பு என்ற அடையாளம் ஓரளவுக்கு கிடைத்தது. ஆனால் இப்பொழுது சித்தார்த்தன் அங்கே இல்லை. அவர் மட்டுமல்ல அவரையும் சுரேஷையும் கடுமையாக விமர்சிக்கும் கஜேந்திரகுமாரின் கட்சியும் இப்பொழுது பேரவைக்கு வெளியே தான் நிற்கின்றது

இப்படிப்பாத்தால் தொடக்க காலத்தில் இருந்த பேரவை இப்பொழுது இல்லை. ஒரு மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் வரலாறு நேர்கோடாக இருக்க வேண்டும் என்றில்லை. அது காலத்தின் தேவைக்கேற்ப கூர்ப்படைய வேண்டும். ஆனால் பேரவையானது அவ்வாறு கூர்ப்படையத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் ஒரு எழுக தமிழுக்கான அழைப்பு வந்திருக்கிறது.

பேரவையை புனரமைப்பது என்பது எப்போதோ தொடங்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதை செய்திருந்திருக்க வேண்டும். அல்லது விக்னேஸ்வரன் அவருடைய கட்சியை பேரவைக் கூட்டத்தில் வைத்து அறிவித்ததோடு அதை செய்திருந்திருக்க வேண்டும். ஆனால் செய்ய வேண்டிய காலங்களில் அதைச் செய்யாமல் விட்டு விட்டு இப்பொழுது ஒரு எழுக தமிழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அடிப்படைப் பலவீனம்தான் எழுக தமிழின் வெற்றி குறித்து சந்தேகங்களை எழுப்பியது. எனினும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சிவில் அமைப்புக்கள் படிப்படியாக அதில் இணைந்து வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் இணைந்து வருகின்றன.

திங்கட் கிழமை ஒரு அலுவலக நாள். அரச அலுவலர்கள் வழமைபோல அரசாங்கத்திற்கு விசுவாசமாக அல்லது அரசாங்கத்தை பகைக்க கூடாது என்பதற்காக அலுவலகங்களுக்கு போகக்கூடும். பாடசாலைகளுக்கு மாணவர்கள் வராமல் விடக்கூடும். ஆனால் அதிபர்களும் ஆசிரியர்களும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொண்டு எழுக தமிழு க்கு வருவார்களா?

இச்சவாலை எதிர்கொள்வதற்காக பேரவை அன்றைய நாளில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். எழுக தமிழ் எனப்படுவது மிகப்பிரமாண்டமான ஒரு மக்கள் போராட்டம் அல்ல.

இதுவரை நடந்த எல்லா எழுக தமிழ்களின் போதும் வடக்கில் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்களே பங்கு பற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் இடைப்பட்ட ஒரு திரட்சி. கிழக்கில் இதில் சரிபாதியே திரண்டது.

உலகில் சமகாலத்தில் நடக்கும் மக்கள் எழுச்சிகளோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய திரட்சி. 2009க்கு முன் நிகழ்ந்த பொங்கு தமிழ் எழுச்சிகளோடு ஒப்பிட முடியாத அளவிற்கு மிகச் சிறியது.

அண்மை மாதங்களாக தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளும் வேட்பாளர்களும் தமது பராக்கிரமத்தை காட்டுவதற்காக திரட்டும் பெரும் கூட்டங்களோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறியது.

ஆனால் 2009 க்குப் பின்னரான கூட்டு உளவியலின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் இதுபோன்ற மக்கள் எழுச்சிகளுக்கு மக்கள் தானாகத் திராள்வது என்பது மகத்தானது.

சில மாதங்களுக்கு முன்பு திருமலையில் கன்னியா வெந்நீரூற்ற்றில் தமது வழிபாட்டு உரிமையை கேட்டு சுமார் 2000 பேர் வரை திரண்டார்கள். அதில் பெண்களும் குழந்தைகளும் காணப்பட்டார்கள். திருகோணமலையைப் பொறுத்தவரை அது ஒரு மகத்தான திரட்சி.

நூற்றுக்கணக்கான படைவீரர்கள் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக் கொண்டு உஷார் நிலையில் நின்றிருந்த ஒரு பின்னணியில் சுமார் 2,000 பேர் அங்கே தன்னியல்பாக வந்தார்கள். சில கட்சிகளும் அதை ஊக்குவித்தன. அங்கே எத்தனை பேர் திரண்டார்கள் என்பது முக்கியமல்ல. அன்றைக்கு இருந்த சூழலில் அது பெரியது.

அப்படித்தான் எழுத தமிழும். இதற்கு முந்திய எழுக தமிழ்களின் போது பேரவை ஓர் ஐக்கியமான அமைப்பாக காணப்பட்டது. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. இச்சவாலை எதிர்கொண்டு வெற்றிகரமாக எழுக தமிழை நடத்தினால்தான் சிதறிக்கிடக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஒரு கூர்மையான செய்தியை உணர்த்தலாம்.

அதேசமயம் தென்னிலங்கைக்கும் செய்தி சொல்லப்படும். கட்சிகள் ஒற்றுமை படாவிட்டாலும் மக்கள் ஒற்றுமையாகத் திரள்வார்கள் என்ற செய்தி தென்னிலங்கைக்கு கொடுக்கப்பட வேண்டும்.

எழுக தமிழ் வெல்லக் கூடாது என்று கருதுவது தென்னிலங்கையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல. தமிழ் பகுதிகளில் இருப்பவர்களும்தான் என்பது ஒரு கொடுமையான வளர்ச்சி. எனினும் தடைகளைத் தாண்டி எழுக தமிழை வெற்றியாக்கிக் காட்ட வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கை நம்பிக்கையூட்டுகிறது. மாணவர்களே பேரணியை ஒழுங்கமைப்பார்களாக இருந்தால் அது கட்சி அடையாளங்களை குறைத்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகை மக்களைத் திரட்டப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது பேரணியில் ஆகக் கூடிய பட்சம் கட்சி அடையாளங்களை பின் தள்ளுவதும். இது விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்குமா?

மேலும் இம்முறை பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மறைமுகமாக ஆதரவை வெளிக்காட்டி இருக்கிறார். கடந்த கிழமை கிளிநொச்சியில் அவர் கல்விச் சமூகத்தோடு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் இரு பேரவை உறுப்பினர்களைப் பேச வைத்திருக்கிறார். அதன்படி பேரவைக்கு கிளிநொச்சி கல்வி சமூகம் ஆதரவாக இருக்கும் என்று தெரிகிறது.

கூட்டமைப்பு இதில் பங்கெடுக்குமா என்று தெரியவில்லை. எனவே அதன் உறுப்பினரான சிறிதரன் எழுக தமிழில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி உண்டு.

எனினும் யாழ் பல்கலைக்கழக கழகத்தின் அறிக்கை, சிறிதரனின் நிலைப்பாடு போன்றன பேரவையை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவை. எழுக தமிழ் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பேரவை தன்னை மறுசீரமைப்பு கொள்ள வேண்டும்.

எழுக தமிழை கடந்து புதிய போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க அது மிக அவசியம். திரும்பத் திரும்ப ஒரு நாள் எழுக தமிழை நடத்திக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது தொடர் போராட்டங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் காணிக்காக போராடும் மக்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. எழுக தமிழ் அதற்கு வேண்டிய உந்து விசையை வழங்குமா?