‘ஒரிசாவுக்கே ஓடிப்போய் விடு’: வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி, செருப்படி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

‘ஒரிசாவுக்கே ஓடிப்போய் விடு’: வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி, செருப்படி!

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

வவுனியாவில் 930வது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை. இனி சர்வதேச விசாரணையும் இல்லை. உள்நாட்டு விசாரணையும் இல்லை. தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தை வன்மையாக கண்டித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரதாராஜபெருமாளின் படத்தினை ‘தமிழர் இரத்தம் குடிக்கும் ஒட்டுக்குழு வரதர்’ என குறிப்பிட்டு காட்சிப்படுத்தி, அப் படத்திற்கு சாணித் தண்ணீரில் விளக்குமாற்றை தோய்த்து அடித்து தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் முன்னாள் முதலமைச்சரை திட்டியும் தீர்த்தனர்.


“வெளியேறு வெளியேறு வரதரே.. ஒரிசாவிற்கு சென்றுவிடு“ என்றும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் பொறுக்கு கூற வேண்டும். எமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்ட களத்தில் நாம் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எமது பிள்ளைகள் காணாமல் போனபோது அரசுடனும், இந்தியாவுடனும் இணைந்து ஒழித்திருந்த ஒட்டுக்குழு வரதர் தற்போது எமது பிள்ளைகளை இல்லை எனக் கூற என்ன அருகதை இருக்கிறது. அவரது மகள், மனைவி காணாமல் போயிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா? என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், தமது போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கோரினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.