74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்ற மங்காயம்மா! கின்னஸ் சாதனை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்ற மங்காயம்மா! கின்னஸ் சாதனை

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் 2 பெண் குழந்தைகளுக்கு தாயாகி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

ஆந்திராவின் நெலபர்த்திபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் 79 வயது ராமராஜூ ராவ், இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி மங்காயம்மா அவருக்கு வயது 74. இவர்களுக்கு திருமணமாகி 57 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தங்கள் வாழ்க்கையை சோகத்துடன் வாழ்ந்துவந்தனர்.


இந்நிலையில், கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த 55 வயது பெண் செயற்கை கருத்தரிப்பு மூலமாக ஆண் குழந்தையை பெற்றெடுத்ததை உத்வேகமாக எடுத்துக்கொண்ட மங்காயம்மா தானும் செயற்கை கருத்தரிப்பு மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் உதவியை அவர்கள் நாடியபோது இதை சவாலாக எடுத்து செய்ய அங்குள்ள வைத்தியர்கள் முடிவு செய்தனர்.


இதையடுத்து, மங்காயம்மாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கருத்தரிப்பதற்கான உடல் தகுதி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, மாதவிலக்கு நின்ற நிலையில் இருந்த அவருக்கு செயற்கை முறையில் ஊசி செலுத்தப்பட்டு மீண்டும் மாதவிலக்கு வரும் விதமாக செய்தனர். பின்னர், அடுத்த மாதத்திலேயே அவருக்கு செயற்கை முறையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. இதனையடுத்து, 9 மாதங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் 8 வது மாதத்தில் மருத்துவமனையில் அவருக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 4 மருத்துவர் தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் மங்காயம்மாவுக்கு பிரசவம் மேற்கொண்டனர். இதில் அவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.


இதையடுத்து மங்காயம்மாவின் கணவர் ராமராஜூ 57 ஆண்டுகள் தாம் கண்ட குழந்தை கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்கள் குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்ற தம்பதி என கின்னஸ் சாதனை படைக்கும் வாய்ப்பு மங்கம்மாவுக்கு இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.