தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வினை, மாவீரர் ஒருவரின் தாயார் பொது தீபச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திலீபனின் சகோதரன், அவரது படத்துக்கு முன்னே உள்ள தீபச்சுடரை ஏற்றி வைத்துள்ளார். மேலும் அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், உயிரிழந்த போராளிகளின் உறவுகள், ஜனநாயக போராளி கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பமாகிய இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி, திலீபன் மரணமடைந்த நல்லூரின் வடக்கு வீதியில் காலை 10.48 மணிக்கு நடைபெறும்.
இந்திய – இலங்கை ஒப்பநதத்தினை தொடர்ந்து இலங்கை வந்த இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக நீராகாரம் அருந்தாமல் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் தியாகி திலீபன் ஈடுபட்டடிருந்த போதிலும் இந்திய அமைதிப் படையினரும் இந்திய அரசாங்கமும் குறித்த கோரிக்கைகளை நியாயமாக பரிசீலனை செய்யத் தவறிய நிலையில் திலீபன் தன்னுடைய உயிரை அர்ப்பணித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியதுடன் இந்தியா மீது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவராகவும் யாழ். மாவட்டத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் ஈருந்தவரான தியாகி திலீபன், யாழ்.குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டதையடுத்து, குடாநாட்டில் புலிகளின் அரசியல் நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.
திலீபனின் ஆரம்ப கால நிர்வாக கட்டமைப்பக்களில் காணப்பட்ட நேர்த்தியே பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்த்தியான நிழல் அரசாங்க கட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான அத்திபாரம் எனக் கூறலாம்.