நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்த கயவன்தான் சவேந்திர சில்வா. ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிலும், டப்ளின், பிரெம்மன் தீர்ப்பு ஆயங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் சவேந்திர சில்வாவின் கொலை பாதகச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமைக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
மனிதகுல வரலாற்றில் பல்வேறுகாலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும்.
ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தாக்குதல்களில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களைக் கொன்று குவித்த அடால்ப் இச்மனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப் பாவி ஆவான்.
ஐ.நா.வழங்கிய உதவிப் பொருட்கள், யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து, காடுகளுக்குள் நிர்க்கதியாக நின்ற அப்பாவித் தமிழர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தவன்.
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் பிடித்துச் சுட்டுக்கொல்ல ஆணை இட்டவன், தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச் சூறையாடி, கொன்று குவித்த அரக்கன், இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி, அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த தமிழர்களைக் கொன்றவன். பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்க வரிசைகளில் நின்ற தாய்மார்கள் மீதும் குண்டுகளை வீசக்காரணம் ஆனவன்.
கொலைகார இராணுவத்தினரை வெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களை இரத்த வேட்டை ஆடியவன். அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்த கயவன்தான் சவேந்திர சில்வா.