சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு சம்பந்தன் - சுமந்திரனும் பொறுப்பேற்க வேண்டும் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 21, 2019

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு சம்பந்தன் - சுமந்திரனும் பொறுப்பேற்க வேண்டும்



சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசை காப்பாற்ற நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிக்கிறார்கள்.

ஒரு பக்கம் அரசாங்கத்தை எதிர்ப்பதை போல காட்டிக்கொண்டு, அதே அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அணுகுமுறையால் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த அணுகுமுறையால்தான், இப்படியான நியமனங்கள் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.

இன்று யாழில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் நம்பத் தகுந்தவர் என்றும், அவருக்கு வாக்களிக்குமாறும் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது. இப்பொழுது மைத்திரி ஏமாற்றி வருகிறார் என்றும், ரணில் ஏமாற்றவில்லையென்பதை போலவும் பேசி வருகிறார்கள்.

சுமந்திரனும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மைத்திரிபாலவை பல விடயங்களில் பாரதூரமாக கண்டித்து வருகிறார்கள்.



கண்டிக்க வேண்டிய விடயங்களில் கண்டிக்கலாம். ஆனால் அதேயளவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏமாற்றுகிறார். இவை எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருக்கிறார்.

இவர்கள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேனவாக இருக்கலாம், இவர்கள் இணைந்து செயற்படுகிற ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம், இவர்கள் எல்லோரும் இணைந்துதான் தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும், தமிழ் மக்களிற்கான இந்த துரோகங்களை செய்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகளிற்கான முழுமையான பொறுப்பை சம்பந்தன், சுமந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நான்கு வருடங்களில் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.


அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென்ற ஒரேயொரு நிகழ்ச்சி நிரல்தான் இவர்களிடமுள்ளதன் காரணத்தால், இந்த அரசாங்கத்துடன் இணங்கிப் போய் தமிழ் மக்களிற்கு எதையும் சாதிக்கவில்லை.

சவேந்திர சில்வா போன்றவர்களின் நியமனத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனத்தை எதிர்த்து சிறிதரன் கண்டனக்குரல் எழுப்புகிறார். ஆனால், இதே நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசை காப்பாற்ற நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிக்கிறார்கள்.

ஒரு பக்கம் அரசாங்கத்தை எதிர்ப்பதை போல காட்டிக்கொண்டு, அதே அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அணுகுமுறையால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால், சவேந்திரசில்வாவின் நியமனம் போன்றவற்றிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்