வடக்கு கிழக்கில் செய்யப்படவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் மற்றும் முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த சில திங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
எனவே நாளை இடம்பெறும் குறித்த சந்திப்பில் இராணுவ முகாம்கள் அகற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பு குறித்து கூட்டமைப்பு அழுத்தங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.