முன்னென்றும் இல்லாத வகையில் அமேசனில் பரவிக்கொண்டிருக்கும் காட்டுத்தீ கால நிலை நெருக்கடியையும் உயிர்ப் பல்வகைமையையும் (Biodiversity) மேலும் மோசமடையச் செய்யும் என்று விஞ்ஞானிகளும் சுற்றாடல் பாதுகாப்பு குழுக்களும் கவலையடைந்திருக்கும் நிலையில், அந்த நெருக்கடி உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருப்பதைக் காணக்கூடியதாகவும் உள்ளது.
"நிர்மூலம் செய்யப்படுகின்ற எந்தக் காடுமே உயர்ப் பல்வகைமைக்கும் அதைப் பயன்படுத்துகின்ற மக்களுக்கும் ஒரு அச்சுறுத்தலே. வளிமண்டலத்திற்குள் பெருமளவு காபன் போகிறது என்பதே திணறடிக்கின்ற அச்சுறுத்தலாகும்" என்று ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் தோமஸ் லவ்ஜோய் 'நாஷனல் ஜியோகிரபிக்' தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசன், 'உலகின் சுவாசப்பை' என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 30 இலட்சம் உயிரினங்கள், தாவர வகைகளின் வசிப்பிடமாக விளங்கும் அந்த காட்டில் பத்து இலட்சம் பழங்குடி மக்களும் வாழ்கிறார்கள். மழைக்காடுகளின் பரந்தகன்ற பகுதி உலகின் சூழல் தொகுதியில் (Ecosystem) பெரும் பங்கை வகிக்கிறது. ஏனென்றால், அவை வளிமண்டலத்திற்குள் வெப்பத்தை திரும்ப வெளிவிடாமல் உறிஞ்சிக்கொள்கின்றன. அத்துடன் அவை காபனீரொக்சைட் வாயுவை சேமித்து வைத்துக்கொண்டு ஒட்சிசனை வெளிவிடுகின்றன. இதன் மூலமாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கும் வகையில் குறைந்தளவு காபன் வளிமண்டலத்தில் வெளியிடப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.
"உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், ஒட்சிசன் மற்றும் உயிரினப்பல்வகைமையின் முக்கிய மூலாதாரமாக விளங்கும் அமேசன் காடுகளுக்கு மேலும் சேதம் ஏற்படுவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது. அமேசனைப் பாதுகாக்கவேண்டும்" என்று ஐக்கிய நாடு கள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸ் டுவிட்டர் சமூக ஊடகம் மூலமாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைவரத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரை பிரேஸிலில் காட்டுத் தீ மூண்ட சம்பவங்கள் 82 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன. 2019 முதல் 8 மாதங்களில் அந்த நாட்டில் மொத்தமாக 71,497 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 2018 இதே காலப்பகுதியில் 39,194 சம்பவங்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
"கடந்த 12 மாதங்களுடன் ஒப்பிடும்போது பிரேஸில் நாட்டின் அமேசனில் காட்டுப் பகுதிகள் 20–30 சதவீதத்தினால் குறைவடைந்திருக்கின்றன" என்று சாவோ போலோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான கார்லோஸ் நோப்றே ஜேர்மனியின் டியூற்ஷே வெல் தொலைக்காட்சிக்கு கூறினார்.
அமேசன் மழைக்காடு களில் காட்டுத்தீ வேகமா கப் பரவுவதற்கு அரசாங்க சார்பற்ற அமைப்புக்களே காரணம் என்று பிரேஸில் ஜனாதிபதி ஜாய்ர் பொல்சானாரோ சில தினங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டி னார். ஆனால், அந்த குற்றச்சாட்டை சூழலியலாளர்கள் மறுதலித்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்தே காடழிப்பு குறித்து அவர்கள் கவலை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். காடழிப்பையும் காட்டுத்தீயையும் சுற்றாடல் பாதுகாப்புக்கு விரோதமான அரசாங்கத்தின் கொள்கைகளே தீவிரப்படுத்தின என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அமேசன் காட்டுத் தீயை ஒரு சர்வதேச நெருக்கடி என்று கூறியிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்றோன், "ஜி7 நாடுகள் பிரான்ஸில் நடைபெறும் அவற் றின் உச்சிமாநாட்டில் இந்த நெருக்கடியை அவசரமாக ஆராயவேண்டும்" என்று வலியுறுத்தி கேட்டிருக்கிறார். "எமது வீடு தீப்பற்றி எரிகிறது; எமது கிரகத்தின் ஒட்சிசனில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கின்ற சுவாசப்பை தீப்பிடித்திருக்கிறது" என்று மக்றோன் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் அந்த பதிவை கண்டித்திருக்கும் பிரேஸில் ஜனாதிபதி, "பிரேஸிலினதும் ஏனைய அமேசன் நாடுகளினதும் உள்விவகாரத்தை பயன்படுத்தி மக்றோன் தனிப்பட்டமுறையில் அனுகூலம் பெற முயற்சிப்பது கவலை தருகி றது. அவரின் கருத்துக்களின் உணர்ச்சிவசத் தொனி பிரச்சினையைத் தீர்க்க எதையும் செய்யப்போவதில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அமேசன் மழைக்காடுகளில் சுமார் 60 சதவீதமானவை பிரேஸிலுக்கு சொந்த மானவை. அவை பாழாகுவது உலக கால நிலையிலும் மழைவீழ்ச்சியிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
காட்டுத் தீயினால் அழிந்துபோயிருக்கும் பகுதியின் பரப்பளவு இன்னமும் திட்ட வட்டமாக தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், காட்டுத் தீயின் விளைவான நெருக்கடி நிலை பிரேஸிலின் எல்லை களைக் கடந்து பெரூ, பரகுவே மற்றும் பொலிவியாவின் பிராந்தியங்களுக்கும் பரவியிருக்கிறது