பாதுகாப்பு தொடர்பாக தற்போதும் சந்தேகம் உள்ளது – மஹிந்த - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 26, 2019

பாதுகாப்பு தொடர்பாக தற்போதும் சந்தேகம் உள்ளது – மஹிந்தஇலங்கையின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக இன்னும் தனக்கு சந்தேகம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாம் அடுத்தவாரம் முதல் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த முறை எங்களுக்கு நிச்சயமாக சிறுபான்மையினத்தவரின் ஆதரவும் கிடைக்கும் என்றே எதிர்ப்பார்க்கிறோம். எப்போதும், அந்த மக்கள் ஏமாறமாட்டார்கள்.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி இதே நிலைமையில் பயனித்தால், அதற்கு எதிர்காலமொன்று இல்லை என்றே கூறவேண்டும்.

தலைமைத்துவம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலெல்லாம் இன்னும் அங்கு போட்டிதான் நிலவிக்கொண்டிருக்கிறது.

எம்மைப் பொறுத்தவரை அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ களமிறங்கினால் மகிழ்ச்சி என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், இங்கு ஒரு விடயத்தையும் பிரதானமாக குறிப்பிட வேண்டும். அதாவது, அவசரகால சட்டத்தினால் நன்மை, தீமை என இரண்டும் உள்ளன. தற்போதும் நாட்டில் குண்டுகளும் துப்பாக்கிகளும் மீட்கப்படுகின்றன.

இன்னொரு பக்கத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்மைப் பொறுத்தவரை அவசரகால சட்டத்தினால், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டால் அல்லது ஒழிக்கப்பட்டால் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

ஆனால், தற்போது அதற்காக அன்றி, வேறு காரணங்களுக்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் நாம் இதற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகிறோம்.

அரசாங்கத்திலுள்ள ஒரு தரப்பினர், அனைத்துத் தீவிரவாதிகளையும் கைது செய்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

எனினும், சில நாட்கள் சென்றவுடன், இன்னும் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இன்னும் முழுமையாக தீவிரவாதிகள் கைதாகவில்லை என்றே தெரிகின்றது.

உண்மையில், பாதுகாப்பு தொடர்பாக எமக்கு இன்னும் சந்தேகம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.