ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ திகதி குறித்த முடிவு சனிக்கிழமை எட்டப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் காலை 8:00 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறியுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியை அமைப்பதற்காக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியின் யாப்பு உருவாக்கும் பணிகளும் நிறைவடையும் என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கட்சி சார்பாக 3 ஆம் தரப்பு உறுப்பினர்களே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டதால் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரையே தேர்தலில் களமிறக்குவது என்ற ஒருமித்த முடிவுக்கு இந்த கூட்டணி வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு, இந்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.