அம்பாறையில் தொலைபேசி மோகத்தால் பரிதாபமாக பலியான ஒன்றரை வயது முஹம்மட் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 6, 2019

அம்பாறையில் தொலைபேசி மோகத்தால் பரிதாபமாக பலியான ஒன்றரை வயது முஹம்மட்


அம்பாறை - நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் இல்யாஸ், அமீருல் நிசா தம்பதிகளின் ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

உயிரிழந்த இல்யாஸ் முஹம்மட் ஆதில் (1 ½ வயது) எனும் குழந்தையின் பாட்டன் குழந்தையை நிந்தவூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு தரித்திருந்த வேளை, அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

அந்த அழைப்பிற்கு பதிலளித்து பேசிக்கொண்டிருந்த வேளை குழந்தை கடலால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

குழந்தை பற்றிய விடயத்தில் கரிசனையற்று தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிய குழந்தையின் பாட்டன், தனது தொலைபேசி உரையாடல் முடிந்த பின்பே குழந்தையைத் தேடியுள்ளார். குழந்தை அங்கில்லை என்பதை அறிந்தவுடன் உடனே வீட்டிற்குச் சென்று தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடமான நிந்தவூர் வௌவாலோடை பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த குழந்தையின் உடல் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது