எமது நாட்டுக்கு அவசர கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தெரிவு சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
களுத்துறை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனது மனச்சாட்சிக்கு அமைய செயற்பட எனக்கு அந்த சுதந்திரம் வேண்டும். இத்தேர்தலில் எமது வேட்பாளர் தெரிவு பிழையானது. இந்நாட்டின் அடுத்த தலைவர் சிறந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராகவும், உடனடியாக கோபம் வராத தலைவராகவும் இருத்தல் வேண்டும்.
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சனம் செய்யும்போது, விசேடமாக ஊடகவியலாளர்களை துன்புறுத்துபவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடாது எனவும் நான் பிரார்த்திக்கிறேன் எனவும் குமார வெல்கம எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.