இயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்- நேரு குணரட்ணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 13, 2019

இயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்- நேரு குணரட்ணம்2008இல் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் நீதிக்காக போராடி அதில் தோற்று இன்று கண்ணீருடன் இயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்

பொதுஜன பெரமுனவின் சனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு சில மணித்துளிகளின் பின்னர் தனது முகப்புத்தகத்தில் ஜெனீபர் வீரசிங்க என்ற சிங்களப் பெண்மணி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இலங்கை (இன்றைய) அரசாங்கம் நீதி வழங்குவதற்கு தவறிவிட்டது. குற்றவாளிகளுடன் இணைந்து செயற்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது என மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமல்ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான டிலானின் தாயார் ஜெனீபர் வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நாட்டின் நீதித்துறை எனக்கும் என்னை போன்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்களிற்கும் நீதி வழங்க தவறிவிட்டதால் குற்றவாளிகளை இயற்கை தண்டிக்கும் என்ற ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் எஞ்சியுள்ளது என அவர் மேலும் பதிவு செய்துள்ளார்.

பதினொரு இளைஞர்களுடன் காணாமல்போன எனது மகனிற்கான கண்ணீர் இன்னமும் வற்றவில்லை என நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என நான் காத்திருந்தேன் அது சாத்தியமாகவில்லை என அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

யுத்தவீரர்கள் என்ற போர்வையில் நடமாடும் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியல்வாதிகள் போடும் நாடகங்களை நாங்கள் பார்க்கின்றோம். கனத்த இதயத்துடன் நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளுடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்பதை பார்த்தோம். தேசபக்தியால் கண்குருடானவர்கள் இவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதுடன் அவர்களை யுத்தவீரர்கள் என புகழ்வதை பார்த்தோம்.

எங்கள் துயரங்களை தங்கள் நன்மைகளிற்காக பயன்படுத்தியவர்களை பார்த்தோம். இதேவேளை கடும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எங்கள் பிள்ளைகளிற்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களை பார்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் மகன் டிலான் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்த அவனின் சிநேகிதன் ரஜீவ் நாகநாதனைச் சந்திக்க சென்றிருந்த வேளையிலேயே ரஜீவுடன் சேர்த்து கடத்தப்பட்டான். பணம் பறிப்பதற்காக கடத்தப்பட்ட இளையவர்களில் இவர்களும் அடங்குவர். இவர்களை கடத்தியவர்கள் கடற்படையினர் தான் என்பதுவும் அது கடற்படைத் தளபதி, கோத்தபாய வரை தெரிந்த விடயம் என்பது குறித்த பல ஆதாரங்கள் பின்னர் வெளிவந்தாலும் எவ்வகையான நீதியும் இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை.

இதில் இன்றைய நீதித்துறையின் அசமந்தப் போக்கு மட்டுமல்ல, இன்றைய ஆட்சியாளர்களின் கூட்டுக் களவாணித்தனத்தையும் வேறு இந்த சிங்களத் தாய் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் இளையவன் ஒருவனை நண்பனாக கொண்டமைக்காகவும், தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததாலும் தனதுயிரை இழந்துவிட்ட இந்த சிங்கள இளைஞனும் நீதிக்காக தொடாந்தும் போராடும் அவனது தாயாரும் தொடர்ந்தும், தமது நீதிக்காக போராடும் தமிழர்களுக்கு ஒட்டுமொத்த சிங்களத் தலைமைகள் குறித்து ஆழமான செய்தியை சொல்லி நிற்கின்றனர்.

ஆனால் ஏனோ இது அரசியல் கதிரைக்காக மட்|டும் அலையும் தமிழ் அரசியலாளர்களின் களிமண்டையில் மட்டும் ஏற மறுக்கிறது. இன்றும் அதே நீதித்துறையிடமும் ஆட்சியாளர்களிடமும் நீதியை பெற்றுத் தருகிறோம் என ஆசை காட்டுகின்றனர். அவ் சிங்களத் தாய் தனது சிங்கள ஆட்சியாளர்கள் குறித்துத் தெரிவித்த கருத்துக்களை விரும்பின் அப்படியே எமது தமிழ்த் தலைமைகள் மீதும் சுமத்திப் பாருங்கள் எதாவது வேறுபாடு உங்களுக்குத் தெரிகிறதா?