இந்திய மாநிலம் கேரளாவில் மாணவியை சீரழித்து கொன்று விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடவுசீட்டால் பொலிசில் சிக்கியுள்ளார்.
கேரளாவில் காஞ்ஞங்காடு பகுதியை சேர்ந்த 36 வயது உமேஷ் என்பவரே 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியா பகுதியில் காலை ஆற்றில் குளிக்க சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் கொலை செய்துள்ளார் என்பதே இவர் மீதான வழக்கு.
சம்பவம் நடந்த மூன்றம் நாள் அப்போது வெறும் 16 வயதேயான உமேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஓராண்டுக்கு பின்னர் விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்களின் தோல்வியே, உமேஷ் விடுதலையாக முக்கிய காரணம் என எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,
அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உமேஷ் குற்றவாளி என நிரூபணமானது.
மட்டுமின்றி தண்டனையை சிறார் நீதிமன்றமே விதிக்க வேண்டும் எனவும், மறு விசாரணை தேவை இல்லை எனவும் உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு வலியுறுத்தியது.
ஆனால் சிறார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பித்து 2008 ஆம் ஆண்டு கடவுசீட்டு ஒன்றை கைப்பற்றிய உமேஷ், குவைத்துக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
இதனிடையே 2018 ஆம் ஆண்டு தமது கடவுசீட்டினை தூதரகம் மூலம் புதிப்பித்துள்ளார்.
வெளிநாட்டில் வைத்து கடவுசீட்டு புதுப்பித்தாலும், ஊருக்கு வந்து திரும்பும்போது அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்பது சட்டமாகும்.
இந்த நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த உமேஷ் அனுமதி சான்றிதழ் கோரி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிசாருக்கு உமேஷ் மீது சந்தேகம் எழவே, அவர்கள் பழைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் பரிசோதித்துள்ளனர்.
அதில் உமேஷ் இதுவரை கைது செய்யப்படாததும், சிறார் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளி இவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து உமேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.