இலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம்! NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 22, 2019

இலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம்! NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்

கடந்த ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைப்போல், தமிழகத்திலும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைத் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூக வலைத்தளத்தில் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, கோவையைச் சேர்ந்த சில இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அதில் முக்கியமானவராகக் கருதப்படும் அசாருதீனிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போதைய கைதுகள் அரங்கேறியதாகச் சொல்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.

இதுகுறித்து உளவுத்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘ஏமனில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்புடைய ‘அன்சாருல்லா’ என்ற புதிய தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் நாகை அருகேயுள்ள சிக்கலைச் சேர்ந்த ஹசன் அலி. இவரின் சகோதரர்களான இஸ்மத் அலி, நவ்ஷாத் அலி ஆகியோர் துபாயில் தங்கியிருந்து, அமைப்பின் ரகசியப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஹசன் அலி, நாகை அருகே மஞ்சக்கொல்லையில் வசிக்கும் அவரின் உறவினர் ஹாரீஸ் இருவரும் இணைந்து, இஸ்லாமிய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து துபாய்க்கு அனுப்பி தீவிரவாதப் பயிற்சிபெற வைத்துள்ளனர்.இவர்களால் அனுப்பப்பட்ட 14 பேரைக்கொண்டு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கிய ஹசன் அலி, சங்கேதப் பாஷையில் தீவிரவாதக் கருத்துகளைப் பரிமாறி வந்துள்ளார்.

இலங்கையைப் போன்று தமிழகத்திலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இதைக் கண்டறிந்த தேசியப் புலனாய்வு முகமையினர், துபாய் அரசுக்குத் தகவல் தந்தனர். அவர்கள் அந்த 14 பேரையும் சுற்றி வளைத்துக் கைதுசெய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கொச்சியிலுள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவலகத்திலிருந்து இரண்டு குழுக்கள் தமிழகத்துக்கு வந்தன.

அதில் ஒரு குழு சென்னை வந்தது. இந்தக் குழு ஹசன் அலியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சையது புகாரிக்குச் சொந்தமான புரசைவாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, மண்ணடி லிங்கி செட்டித்தெருவில் இயங்கிவந்த அலுவலகம், வேப்பேரியிலுள்ள மற்றொரு அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் அதிர்ச்சிகரமான ஆவணங்கள் சிக்கின. உடனே சையது புகாரி கைது செய்யப்பட்டார்.அதே வேளையில், சிக்கலைச் சேர்ந்த ஹசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அன்சாருல்லா அமைப்பினர் நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியுள்ளனர்.

தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

மிகப் பெரும் கலவரம் நடக்கும் முன்பு அதற்குக் காரணமானவர்களை என்.ஐ.ஏ கைதுசெய்துவிட்டது என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார்