இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய வரவுசெலவுத் திட்டம் குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என இந்தோ-ஆசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய நாடாக இலங்கை விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.
எனினும், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மொறிசியஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கே இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டில் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொறிசியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடி ரூபாயில் இருந்து, 1100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவில் மொகமட் இப்ராகிம் சோலி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டு 576 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிடம் உதவி பெறும் நாடுகளில் பூட்டானை அடுத்து மொறிசியசுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு அடுத்ததாக, மாலைதீவுக்கு நான்காவது அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது.
இருப்பினும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கை இருந்த போதும், இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை, இலங்கை அரசாங்கம் அற்பமாக உணர்ந்ததாக அறியப்படுகிறது.
இந்தநிதி ஒதுக்கீடு “அதன் தேவைகளுக்கு ஏற்ப இல்லை” என்று இலங்கை உணர்கிறது என்றும், உதவித் தொகையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.