யாழ்.மானிப்பாய் பகுதியில் நேற்று இரவு பொலிஸாா் நடாத்திய துப்பாக்கி சூட்டில் உயிாிழந்த இளைஞன் கொடிகாமம்- கச்சாய் பகுதியை சோ்ந்த 23 வயதான செ.கவிகஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை இன்று அதிகாலையில் அவரது உறவினர்கள் பார்வையிட்டனர்.
இதன்போது குறித்த இளைஞன் யார் என்பது தொடர்பில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆவா குழுவை சேர்ந்த ஆறு பேர் மானிப்பாயிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்த சென்ற பொலிஸார் சோதனை செய்ய முயன்றுள்ளனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயம் அடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்மராட்சியிலிருந்து குறித்த இளைஞன் உட்பட 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.