சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளியை பார்வையிட வந்த ஒருவர் தவறவிடப்பட்ட நகைகள், வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை பார்வையிட, பெண்ணொருவர் சென்றார்.
வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்பாக, நகைக்கடை ஒன்றில் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கு சில நகைகளை கொள்வனவு செய்திருந்தார். அந்த நகைகளுடன் வைத்தியசாலைக்கு சென்றார்.
வைத்தியசாலைக்குள் செல்லும்போது, அவரது உடைமையிலிருந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த பை தவறி கீழே விழுந்திருந்தது.
இதை அந்த பெண் கவனிக்கவில்லை. எனினும், நோயாளியொருவரை பராமரிப்பதற்காக தங்கியிருந்த ஒருவர் அந்த நகைப்பையை மீட்டு, வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.
வைத்தியசாலை சிற்றூழியர் மூலம் தாதியரிடம் ஒப்படைக்கப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்குள் இது நிகழ்ந்தது.
இதற்குள், நகைப் பையை தவறவிட்டதை உணர்ந்த பெண்மணி பதற்றமடைந்து, வைத்தியசாலையில் தேடத் தொடங்கினார்.
நகைப்பை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல் அவருக்கு தெரிய வர, அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள சென்றார்.
அவர் கூறிய அடையாளங்களின்படி பைக்குள் நகைகள் இருக்கவில்லை. மோதிரம், சங்கிலி உள்ளிட்ட சிலவற்றை காணவில்லை.
இதையடுத்து, நகைப்பையை ஒப்படைத்த வைத்தியசாலை சிற்றூழியரில் சந்தேகமடைந்து அவரை சோதனையிட முடிவெடுக்கப்பட்டது.
விடுதி கழிவறைக்கு அவரை அழைத்து சென்று சோதனையிட்டபோது, அவரது சட்டைக்குள்ளிருந்து காணாமல் போன நகைகள் கீழே விழுந்தன.
அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விவகாரத்தை சுமுகமாக முடித்து வைத்தது வைத்தியசாலை நிர்வாகம்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நகைத் திருட்டு சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தபோதும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நகைத் திருட்டிலாவது உரிய நடவடிக்கையெடுக்கப்படுமா என்ற கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.