இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக ஒன்று கூடிய அவுஸ்திரேலிய மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 7, 2019

இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக ஒன்று கூடிய அவுஸ்திரேலிய மக்கள்!

மெல்போர்ன் குடிவரவு தடுப்பு மையத்தில் இருந்தபோது தலையில் காயம் அடைந்த இரண்டு வயது தமிழ் சிறுமிக்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவ பராமரிப்பு மறுக்கப்பட்டது என்று வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களான பிரியா மற்றும் நடேஸ் தம்பதியினருக்கு கோபிகா மற்றும் தாருனிகா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் கடந்த ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு முன்பாக குயின்ஸ்லாந்தின் பிலியோலாவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு மெல்போர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.


அங்கு வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மெல்போர்ன் குடிவரவு போக்குவரத்து விடுதி மையத்தில் இருந்த கரும்பலகை ஒன்று தாருனிகாவின் தலையில் விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த தாருனிகா வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதனை பார்த்த பொலிஸார் பெரும் கவலையடைந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த மேலாண்மை அதிகாரிகள், சுமார் ஐந்து மணி நேரம் தாருனிகாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.


பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் குழந்தை வாந்தி எடுத்ததை அடுத்து, இரவு 11.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் குடிவரவு தடுப்பு மையத்திற்கு திரும்பியுள்ளனர் என குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

குழந்தை ஏன் முதல்முறை வாந்தி எடுத்தபொழுதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


இந்த நிலையில் அவருடைய பெற்றோர், தாருனிகா நடப்பதில் இன்னும் சிக்கலுடன் இருக்கிறாள். அவளுடைய ஒரு கால் இன்னும் பலவீனமாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஸ்கேன் செய்வதற்காக அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதன் ஸ்கேன் முடிவுகளுக்காக தற்போது காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.


மேலும் தங்களுடைய மகள் நலனில் அக்கறை செலுத்திய அனைவரும் நன்றி என தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நடேஷ் குடும்பத்தினரை மீண்டும் அவர்களுடைய வீட்டிற்கே திரும்ப அனுப்ப வேண்டும் என வக்கீல்கள் தொடங்கிய மனுவில் 190,000 க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது