நாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 14, 2019

நாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்?

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் முழுமையான ஆசீர்வாதத்துடன்  சம்புத்தி சுமன விகாரை இன்று பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள யாத்திரீகர்களது பங்கெடுப்புடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி பதவியுயர்வுடன் கொழும்புக்கு மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ,காவல்துறை அதிகாரிகள்,மற்றும் கடற்படை,விமானப்படை அதிகாரிகள் என அனைவரும் அணிதிரள பிரதிஸ்டை நிகழ்வு நடைபெற்றிருந்தது.


இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரையே  நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையென பிரதிஸடை செய்யப்பட்டுள்ளது.


2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.  

பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.


காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் நாவற்குழியில் மேற்கொள்ளப்பட்ட புதிய சிங்கள குடியேற்றத்தில் மிகப் பெரியளவில் அமைக்கப்பட்ட சம்புத்தி சுமன விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


போர் முடிவடைந்த பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றப் பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும் அந்த விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந் நிலையில் சம்புத்தி சுமன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரையின் புன்னிய திருவிழாவாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த விகாரைக்கான புனித தாது குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தது. 

இதற்கமைய நவாற்குழிச் சந்தியிலிருந்து குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பவணியாக புனித தாது கொண்டு செல்லப்பட்டது. சிங்கள பாரம்பரிய முறைப்படி குறித்த விகாரைக்கு எடுத்து வரப்பட்டு  திருவிழா நடைபெற்றது.

இதே வேளை இந் நிகழ்விற்கு இரானுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு விகாரைக்குள் செல்வதற்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.