விடுதலைப் புலிகளுக்கு இராணுவமே ஆயுதங்கள் வழங்கியது - சிறிதரன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

விடுதலைப் புலிகளுக்கு இராணுவமே ஆயுதங்கள் வழங்கியது - சிறிதரன்


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வேண்டிய நிலையை இலங்கை இராணுவம் ஒருபோதும் உருவாக்கியிருக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்றும் இலங்கை நாட்டினுடைய அரச தலைவர் பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும்.

சத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வேண்டிய நிலையை இலங்கை இராணுவம் ஒருபோதும் உருவாக்கியிருக்கவில்லை.

1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு தமது ஆயுதப்போராட்ட வாழ்வை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் 1985 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலை மேற்கொண்டு அதிகூடியளவான ஆயுதங்களையும், முல்லைத்தீவு இராணுவ முகாமைத் தகர்த்து ஆட்லறிகளை கைப்பற்றியும், பூநகரி இராணுவ முகாமை தகர்த்தழித்து டாங்கிகளை கைப்பற்றியும், கொக்காவில், மாங்குளம் இராணுவ முகாம்களிலிருந்தும், மட்டக்களப்பின் புளுக்குனாவ போன்ற பகுதிகளிலிருந்து 30mm ஆட்லறிகளை அதிகூடியளவில் கைப்பற்றியிருந்ததும், குடாரப்பு தரையிறக்கம், சூரியக்கதிர், ஓயாத அலைகள் உள்ளிட்ட திட்டமிட்ட தாக்குதல்களின் மூலம் இராணுவக் காவலரண்களையும், முகாம்களையும் தகர்த்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியிருந்ததும், 1988,1989களில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் இந்த உலகமே அறிந்த வரலாறு.

இலங்கையின் வனவளங்களை பிரபாகரனே பாதுகாத்து தந்துள்ளார் என அண்மையில் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய ஜனாதிபதி, காடு வளர்ப்பு முதல் கரையோர பாதுகாப்பு வரை தனது நிர்வாகத்தின் கீழிருந்த மக்களோடு நிலம், நீர், கடல், காடு என அனைத்துக்கும் பாதுகாப்பளித்து, 32 நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி, சர்வதேசமே வியந்து பார்த்த ஒரு அரசை வழிநடத்திய பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்றும் அந்த வருமானத்திலேயே ஆயுதம் வாங்கி விடுதலைப்புலிகள் இயக்கத்தை வழிநடாத்தினார் என்றும் திடீரென கனவிலிருந்து முழித்தவர் பிதற்றுவது போல சற்றும் பொருத்தமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருப்பது அவரது இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.

சாதாரண சிங்கள குடிமகன் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும், அதன் கொள்கைகள், கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு, அமைப்பினதும், அதன் தலைவரதும் புனிதத்தன்மையை மதிக்கின்ற சூழலிலும், இன்றுவரை எந்தவொரு அரசதலைவராலும் புலிகள் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையிலும், மகிந்த ராஜபக்சவாலும், ரணில் விக்ரமசிங்கவாலும் மனநிலை குழம்பிப் போயுள்ள ஜனாதிபதி வெளியிட்டுள்ள இக்கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளது.

எப்போதுமே தமிழர்கள் வேறு, புலிகள் வேறு என்ற மனநிலை தமிழர்களிடத்தில் இருந்ததே இல்லை. அப்படிப்பட்டதொரு சூழலில் மக்களின் பரிபூரண ஒத்துழைப்போடு தமிழர் பகுதிகளில் நடைபெற்று வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நியாயமான வரி அறவீடுகள் மூலமும், புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்பின் மூலமும் நேர்த்தியான, அர்ப்பணிப்பு மிக்க, சுயலாபமற்ற, கொள்கைப்பற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பும், அதன் தலைவர் பிரபாகரனும் செயற்பட்டு வந்தனர் என்பதை உணர்ந்து இனிமேலாவது ஜனாதிபதி தனது இயாமையை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாக இவ்வாறான கருத்துக்களை வெளியிடாமல் இருந்தால் தான் அரச தலைவர் என்ற ரீதியிலேனும் மக்கள் மத்தியில் அவருக்குள்ள கொஞ்சநஞ்ச மதிப்பு, மரியாதையையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும், என்றார்.