முல்லைத்தீவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பலொன்று வீட்டு உரிமையாளர்களை கை கால் வாய்களை கட்டிப்போட்டு அவர்களின் வீட்டு அருகில் கிடங்கு ஒன்றை கிண்டி மூடிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் விசுவமடு புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சுமார் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலொன்று நாதன் குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்குள் திடீரென புகுந்துள்ளனர்.
அந்த வீட்டில் நடக்கமுடியாத பெண்ணும் அவருடைய மகனும் இருந்த நிலையில் அவர்களை பிடித்து கைகள், கால்கள், கண்கள் மற்றும் வாயை
கட்டிவிட்டு ஒரு அறைக்குள் இருவரையும் வைத்து பூட்டியுள்ளனர்.
அதன்பின்னர் வீட்டுக்கு பக்கத்தில் பாரிய கிடங்கொன்றை கிண்டிய பின்னர் அந்த கிடங்கை மூடிவிட்டு, கட்டிவிட்டு சென்ற சிறுவனுடைய கைகள், கால்கள்,
கண்கள் மற்றும் வாயை அவிழ்த்து விட்டு அதிகாலை 3:00 மணியளவில் வீட்டை விட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நடக்கும் போது வீட்டிலிருந்த பெண்ணின் தாயாரின் தந்தை (சிறுவனின் பேரன்) வெளியில் சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டுக்கு வந்த அவர் நடந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிசார் வீட்டுக்காரரை அச்சசுறுத்தும் விதமாக நடந்து கொள்வதோடு, அங்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கொள்ளை கும்பலுடன் பெண் ஒருவரும் இருந்துள்ளதாகவும், குறித்த மர்ம கும்பல் தொடர்பில் பொலிஸார் அறிந்திருக்கலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முன்னர் குறித்த காணியை விற்பனை செய்த நபர் பொலிசாருடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகவும் தான் விற்ற காணியை மீள அபகரிக்கும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கும்பல் தோண்டிய கிடங்கிற்குள் மர்ம கும்பல் விட்டுச் சென்ற பாதணி ஒரு சோடி காணப்பட்டதாகவும் எனினும் இதுவரை பொலீசார் எந்தவித தடய ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.