முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான் . என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாக பேசுங்கள்.பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதை பலதடவைகள் நிரூபித்துள்ளேன். அரசியல் பின்னணி – எண்ணங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்..”
இவ்வாறு கொழும்பில் இன்று நடைபெற்ற இராணுவத்தினரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஈஸ்ரர் தின தாக்குதல்களுக்கு மூன்றுமாத காலம் நிறைவுற்ற நேற்று நீர்கொழும்பில் உரையாற்றிய பேராயர் ரஞ்ஜித் மல்கம் ஆண்டகை , முதுகெலும்பற்ற அரசியல் தலைவர்கள் ஆட்சியை விட்டு வெளியேறவேண்டுமென கூறியிருந்தார்.
இன்று ஜனாதிபதி ஆற்றிய உரை , பேராயரை தாக்கிப் பேசும் விதமாகவே இருந்தது.
“முக்கியமான இரண்டு அதிகாரிகள் தமது கடமையை சரியாக செய்யவில்லை.அதனால் அந்த சம்பவத்தை தடுக்க முடியாமற் போனது. இது எல்லோருக்கும் தெரியும்.நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய தேவை இல்லை.எங்களை வீட்டுக்கு போக யாரும் சொல்லவேண்டியதில்லை. வீட்டுக்கு போவோம். தேவையானால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம். எங்களுக்கு நல்ல முதுகெலும்பு உள்ளது. சிங்கள பெற்றோரின் வளர்ப்பில் சிங்கள பௌத்த இரத்தம் கொண்டவன் நான். 2015 ஆம் ஆண்டும் அதற்கு பின்னர் பிரதமரை
நீக்கி கடந்த ஆண்டு வேறு ஒருவரை பிரதமராக நியமித்தபோதும் எனக்கு முதுகெலும்பு இருந்தது.அரசுக்கு எதிராக விசாரணை ஆணைக்குழு நியமித்ததே எனக்கு முதுகெலும்பு இருப்பதால் தான்.சாரைப்பாம்பு , நாகபாம்பு , விரியன் பாம்புகளுக்கு தான் முதுகெலும்பில்லை .
எதையும் நாங்கள் மறைத்து வைத்திருந்தால் பகிரங்கமாக எங்களிடம் சொல்லலாம்.அல்லது நீதிமன்றத்துக்கு செல்லலாம். அதைவிடுத்து அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு முதுகெலும்பில்லை என்று கூறுபவர்கள் கடந்த கால தலைவர்களை இப்படி விமர்சித்திருப்பார்களா? அப்படி செய்திருந்தால் வீடு வாசல் இல்லாமல் போயிருக்கும். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த தலைவன் என்றபடியால் என்னை விமர்சிக்கின்றனர். புனித பாப்பரசர்கள் மீது நாம் மதிப்பு வைத்துள்ளோம்.ஆனால் எம் மீது அபாண்டமாக பழி போடக் கூடாது – என்றார் மைத்ரி