யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் வடக்கு - இணுவில் பகுதியில் வீதி சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.
மானிப்பாயில் உள்ள வீடொன்றைத் தாக்குவதற்கு ஆவா குழுவைச் சேர்ந்தோர் வருவதாக முன்னதாகவே கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதி சோதணை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தோர் தப்பிக்க முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்
சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.
இளைஞனின் சடலம் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.