மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை கூடிய விலைக்கு கொள்வனவு செய்யும் முஸ்லிம்கள்! விக்னேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம், காணிகள், உரித்துக்கள் பறிபோகின்றதாகவும், இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாகவும் மக்களால் என்னிடம் கூறப்பட்டது.
அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு சென்றார்கள் என்றால் அந்த இடத்தில் வந்து முஸ்லிம்கள் குடியிருக்கின்றார்கள்.
வறுமையின் காரணமாக எமது பெண்கள் மதமாறுவது பிரச்சினையாக உள்ளது. இதனால் எமது உரித்துக்கள் பறிபோகின்றன. இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாங்கள் எங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் பலமாக இருந்தால் எங்கள் பெண்கள் வெளியில் போக மாட்டார்கள், எங்களது காணிகளை மற்றவர்கள் கொள்வனவு செய்வதற்கு அவசியம் இருக்காது.
ஏனெனில் நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும்.
தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும்.
புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அத்தோடு பொறுமையும் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
எனவே இதனை எவ்வாறு தடை செய்யலாம், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம், இதனை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் என்று பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் போய் விட்டது இனி என்ன நடக்கப் போகின்றதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளதை நான் காண்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
"விக்னேஸ்வரன் கருத்தை ஹிஸ்புல்லாஹ் மறுக்கிறார்"
300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்தை முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலாநிதி சீ.வி.விக்னேஸ்வரன் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக வெளியிட்ட செய்தி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவை பாதிக்கின்றது.
அவ்வாறு தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பில் ஆராய்ந்து இந்தக்கிராமங்களை நாங்கள் முடியுமான வரை தமிழ் மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழ், முஸ்லிம் தலைமைகள் மத்தியிலே இருக்கிறது.
அதே போன்று பல முஸ்லிம் கிராமங்கள் தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்புக்களினாலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.எனவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இவ் அறிக்கையினை வெளியிட்டிருப்பார் என நினைக்கவில்லை.
ஆகவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மதிப்பையும், மரியாதையும் முன்னிட்டு உடனடியாக இந்த 300 தமிழ் கிராமங்கள் எந்த மாவட்டத்தில் எங்குள்ள தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் மீது நான் என்றும் மரியாதை வைத்துள்ளேன், உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் தலைமைகள் இறுதித்தீர்மானத்தினை எடுக்கவேண்டியுள்ளதால் உடனடியாக தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட விபரத்தினை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.