முருகன் ஆலயத்திலிருந்து திரும்பியவர்களிற்கு கடற்படை சோதனைச்சாவடியில் நேர்ந்த விபரீதம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 7, 2019

முருகன் ஆலயத்திலிருந்து திரும்பியவர்களிற்கு கடற்படை சோதனைச்சாவடியில் நேர்ந்த விபரீதம்!அக்கரைப்பற்று பாலமுனை ஒலுவிலில் கடற்படையினரின் வீதி தடையை மோதிய டொல்பின் வாகனத்தில் பயணம் செய்த 12 க்கும் அதிகமாவர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உகந்தை முருகன் ஆலயத்தை தரிசித்து விட்டு தங்கள் சொந்த இடமான கல்முனை பகுதியை நோக்கி செல்லும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பாலமுனை ஒலுவில் துறைமுக பிரதான நுழைவாயில் பிரதான வீதியை இணைக்கின்ற பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் வீதி தடை உள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 4 வயதான சிறுமி அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து நடைபெற்ற பகுதியை சூழ்ந்த மக்கள் இவ்வாறு பிரதான வீதியில் கடற்படையினர் அமைத்துள்ள சோதனைச்சாவடி இருளில் உள்ளதாகவும் எந்தவித வெளிச்சமும் இன்றி காணப்படுவதனால் அருகே செல்லும் போது தான் முன்னால் சோதனை சாவடி தென்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் டொல்பின் வாகனம் விபத்துக்குள்ளாக காரணம் சோதனை சாவடி தூரத்தில் இருந்து பார்க்கின்ற போது தெரிவதில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கடந்த உயிர்த்த ஞாயிறு தினதன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு தரப்பினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது